டில்லி அடுக்குமாடி குடியிருப்பில் 'ஏசி' வெடித்து தீ விபத்து; 9 பேர் பலி
டில்லி அடுக்குமாடி குடியிருப்பில் 'ஏசி' வெடித்து தீ விபத்து; 9 பேர் பலி
ADDED : மே 04, 2026 04:47 AM

புதுடில்லி: டில்லியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் 'ஏசி' வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 1 வயது குழந்தை உட்பட ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிழக்கு டில்லியின் விவேக் விஹார் பகுதியில் நான்கு மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தின் இரண்டாவது தளத்தில், நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி அங்கு, 14 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
அப்போது காற்றின் வேகம் காரணமாக, மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களுக்கும் தீ பரவியது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்புப் படையினர், அடுக்குமாடி குடியிருப்புக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
நான்கு மாடிகள் கொண்ட இக்கட்டடத்தின் இரண்டாம் தளத்தில் ஐந்து பேரும், மூன்றாம் தளத்தில் மூன்று பேர், முதல் தளத்தில் ஒருவர் என மொத்தம் ஒன்பது பேர் பலியாகினர். இதில், 1 வயது குழந்தையும் பலியானது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இரண்டு பேர், அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதவிர, 10க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இரும்பு ஜன்னல் கம்பிகள், மொட்டை மாடி கதவு மூடப்பட்டதாலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக இருந்ததாக மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
மேலும் மிகவும் குறுகிய சாலையாக இருப்பதுடன், போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாததால், தீயணைப்பு வாகனங்கள் மீட்புப் பணியில் ஈடுபடுவதில் கடும் சிரமத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஒரு வீட்டில் இருந்த 'ஏசி' வெடித்ததே இந்த விபத்திற்கு காரணமாக இருக்கக்கூடும் என தெரியவந்துள்ளது.
இதுபற்றி விரிவாக விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே, இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங் கல் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ௨ லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
