ADDED : பிப் 16, 2025 08:45 PM

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.,வின் புதிய அரசு வரும் நாளை மறுநாள் (பிப்.,18) பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டில்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பா.ஜ., பிடித்துள்ளது. முதல்வர் பதவிக்கான வேட்பாளரை அறிவிக்காமலேயே தேர்தலை சந்தித்து, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பா.ஜ., கைப்பற்றியுள்ளது.
முதல்வராக யாரை தேர்வு செய்வது என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய பிறகு, வரும் 16 அல்லது 17ம் தேதி பா.ஜ.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெறும் என்றும், அதில் பா.ஜ.க., சட்டமன்ற குழு தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியாகி வந்தது.
இந்த நிலையில், டில்லியில் பா.ஜ., அரசு வரும் 18ம் தேதி பதவியேற்க இருப்பதாகவும் பதவியேற்பு விழா ராம்லீலா மைதானத்தில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டில்லி முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகனும், ஆம்ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்தவருமான பர்வேஷ் வர்மா முதல்வருக்கான போட்டியில் இருக்கிறார். அதேபோல, முன்னாள் மாநில பா.ஜ., தலைவர் மனோஜ் திவாரியும் முதல்வருக்கான ரேஸில் நீடிக்கிறார். இருவரில் யாரேனும் ஒருவர் முதல்வராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

