ADDED : டிச 09, 2025 08:50 PM

புதுடில்லி: டில்லி செங்கோட்டை அருகே நடந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் தொடர்பாக காஷ்மீரைச் சேர்ந்த டாக்டர் ஒருவனை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்படும் 8 வது பயங்கரவாதி இவன் ஆவான்.
கடந்த நவ.,10ம் தேதி டில்லி செங்கோட்டை அருகேயுள்ள சிக்னலில் உமர் நபி என்ற பயங்கரவாதி நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்த தற்கொலைப்படைத் தாக்குதல் தொடர்புடைய உமர் நபிக்கு நெருக்கமானவர்களை என்ஐஏ தொடர்ந்து கைது செய்து வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக ஹரியானா மாநிலம் பரிதாபாதில் உள்ள அல்பலாஹ் பல்கலையில் பணியாற்றும் டாக்டர் உள்ளிட்ட 7 பயங்கரவாதிகளை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இந்நிலையில் இந்த தற்கொலைப்படை தாக்குதலில் மற்றொரு பயங்கரவாதியை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் பிலால் நசீர் மல்லா என்பவனை கைது செய்துள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

