டில்லியில் வெடி விபத்து; பாக்., சேனலில் பகீர் தகவல்
டில்லியில் வெடி விபத்து; பாக்., சேனலில் பகீர் தகவல்
ADDED : அக் 21, 2024 10:25 AM

புதுடில்லி: டில்லியில் ரோகிணி பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எப்., பள்ளி அருகே, நேற்று காலை பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்தது. இந்த சி.வி.டி.வி., காட்சிகளை பாகிஸ்தான் டெலிகிராம் சேனலில் பகிரப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் பின்னணியில் காலிஸ்தானி செயல்பாட்டாளர்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.
டில்லியின் ரோகிணி பகுதியில் உள்ள பிரசாந்த் விஹார் என்ற இடத்தில், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி சுற்றுச்சுவர் அருகே, நேற்று காலை 7:30 மணிக்கு, பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்தது.
இதனால், அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்த நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. வெடி சத்தத்தை கேட்டு அலறிய பொதுமக்கள், போலீசாருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வெடி சத்தத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சி.வி.டி.வி., காட்சிகளை பாகிஸ்தான் டெலிகிராம் சேனலில் பகிரப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் பின்னணியில் காலிஸ்தானி செயல்பாட்டாளர்கள இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. முழுமையான விசாரணைக்குப் பின்னரே இந்தக் கூற்றுகளின் உண்மைத் தன்மையை கண்டறிய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

