தீபாவளியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த சதிக்காரர்கள்; டில்லி குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையில் திடுக்
தீபாவளியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த சதிக்காரர்கள்; டில்லி குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையில் திடுக்
UPDATED : நவ 12, 2025 12:10 PM
ADDED : நவ 12, 2025 10:57 AM

புதுடில்லி: டில்லியில் கார் குண்டுவெடிப்பை நிகழ்த்திய சதிக்காரர்கள் தீபாவளி பண்டிகைக்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர் என விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
டில்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியுள்ளது. 'ஆப்பரேஷன் சிந்துார்' ராணுவ நடவடிக்கைக்கு பழிதீர்க்கும் விதமாக, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் அனைவரும் நன்கு படித்த டாக்டர்கள் என தெரியவந்துள்ளது.
போலீசாரின் சந்தேக பார்வை, டாக்டர் போன்ற பெரிய பதவிகளில் இருப்பவர்கள் மீது விழாது என்பதால், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அவர்களை மூளைச்சலவை செய்திருப்பதும் அம்பலமாகி உள்ளது. இதுவரை, 6 கொடூர டாக்டர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
புல்வாமாவைச் சேர்ந்த முஸம்மில் கனி, உ.பி.,யின் லக்னோவைச் சேர்ந்த ஷஹீன் சயீத், ஜம்மு - காஷ்மீரின் குல்காமை சேர்ந்த அதீல், புல்வாமாவைச் சேர்ந்த உமர் நபி, தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்த அகமது மொஹியுதீன், ஸ்ரீநகரில் செயல்பட்டு வரும் மஹாராஷா ஹரிசிங் மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர் தஜமுல் கைது செய்யப்பட்டனர்.
முக்கிய குற்றவாளியாக கருதப்படும், புல்வாமாவைச் சேர்ந்த முஸம்மில் இடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முஸம்மிலிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவரது தொலைபேசியை போலீசார் ஆய்வு செய்தனர். விசாரணையின் போது, அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி தாக்குதல் திட்டம் இருப்பதாகவும், அதன் ஒரு பகுதியாக செங்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதியை நோட்டமிட்டு வந்ததாக கூறினார்.
தீபாவளிக்கு மக்கள் நெரிசலான இடத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அதை செயல்படுத்த முடியவில்லை என்றும் முஸம்மில் போலீசாரிடம் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

