டில்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில்... 'ஷாக் ரிப்போர்ட்!' : பாக்., பயங்கரவாத அமைப்பின் நிதியுதவி அம்பலம்
டில்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில்... 'ஷாக் ரிப்போர்ட்!' : பாக்., பயங்கரவாத அமைப்பின் நிதியுதவி அம்பலம்
ADDED : நவ 17, 2025 12:56 AM

பரிதாபாத்: டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தி உயிரிழந்த டாக்டர் உமர் மற்றும் கைதான டாக்டர்கள் முஸாமில் கனி, ஷாஹீன் உள்ளிட்டோருக்கு நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு ஹவாலா நெட்வொர்க் மூலம் 20 லட்சம் ரூபாய் அனுப்பியது தெரியவந்துள்ளது.
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு பழி தீர்க்கும் விதமாக, நம் நாட்டில் தாக்குதல் நடத்த, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு சதித் திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறை எச்சரித்தது.
இந்நிலையில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பை ஆதரித்து, ஜம்மு - காஷ்மீரில் கடந்த அக்டோபரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இது தொடர்பாக ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதில் என்ற டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
மூன்று டாக்டர்கள் அவரிடம் நடத்திய விசாரணையில் ஜெய்ஷ் -- இ -- முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த காஷ்மீரைச் சேர்ந்த முஸாமில் அகமது கனி, அதில் அகமது மற்றும் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த ஷாஹீன் சயீத் உள்ளிட்ட மூன்று டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் மூவரும், ஹரியானாவின் அல் பலாஹ் மருத்துவப் பல்கலையில் பணியாற்றியவர்கள் என தெரியவந்தது.
அப்பல்கலை வளாகம் அருகே பதுக்கி வைத்திருந்த 360 கிலோ வெடிபொருட்களையும் போலீசார் கைப்பற்றினர்.
இதே பல்கலையைச் சேர்ந்த டாக்டர் உமர் நபிக்கு இவர்களுடன் தொடர்பு இருப்பது தெரிந்தது. அவரை போலீசார் தேடி வந்த நிலையில், டில்லியில் வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஓட்டிச் சென்று அவர் வெடிக்க வைத்தார்.
ரூ.20 லட்சம் இந்த வழக்கை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கிறது. இதற்கிடையே டாக்டர்கள் அடங்கிய பயங்கரவாத கும்பல் மற்றும் டில்லி குண்டுவெடிப்பு பற்றி மத்திய உளவுத்துறையும் விசாரித்து முதற்கட்ட அறிக்கை அளித்துஉள்ளனர்.
அது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
டாக்டர்கள் உமர், முஸாமில், ஷாஹீன் ஆகியோருக்கு ஜெய்ஷ் - -இ - -முகமது அமைப்பு ஹவாலா நெட்வொர்க் மூலம், 20 லட்சம் ரூபாயை அனுப்பி உள்ளது.
அதை வைத்தே கள்ள சந்தையில் அமோனியம் நைட்ரேட் மற்றும் டி.ஏ.டி.பி., எனப்படும் டிரைஅசிடோன் டிரைபெராக்சைட் போன்ற வேதிப்பொருட்களை குண்டு தயாரிக்க வாங்கி உள்ளனர்.
முன் கூட்டியே இந்த கும்பலை காஷ்மீர் போலீசார் கண்டுபிடித்ததால் டிசம்பர் 6ல் டில்லியில் நடக்க இருந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பு தடுக்கப்பட்டுள்ளது. இந்த சதித்திட்டத்தில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அல் பலாஹ் பல்கலை
நிறுவனர் குற்றவாளி
டில்லி கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய டாக்டர்கள் பணியாற்றிய ஹரியானாவின் அல் பலாஹ் பல்கலையின் நிறுவனர் மற்றும் இயக்குநர் இருவரும் முதலீட்டாளர்களின் 7.5 கோடி ரூபாய் நிதியை மோசடி செய்த வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன் சிறைத்தண்டனை அனுபவித்தது தெரியவந்துள்ளது.

