ADDED : செப் 25, 2024 08:11 PM

புதுடில்லி: டில்லி ஆம் ஆத்மி புதிய முதல்வராக பதவியேற்ற ஆதிஷிக்கு ‛இசட் ' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு புகாரில், டில்லி முதல்வராக இருந்த ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கினாலும், 'முதல்வர் அலுவலகத்திற்கு செல்லக்கூடாது; கோப்புகளில் கையெழுத்திடக் கூடாது' என்பது உட்பட பல நிபந்தனைகளை விதித்தது.
அதனால், தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி அமைச்சரான ஆதிஷி புதிய முதல்வராக ஆதிஷி, 43, தேர்வு செய்யப்பட்டார். கடந்த 21-ம் தேதி பதவியேற்றார். துணை நிலை கவர்னர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் ஆதிஷிக்கு மத்திய அரசு ‛இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இதன்படி , மத்திய ரிசர்வ் படையின் ஆயுதமேந்திய 22 போலீசார் 24 மணி நேரமும், சுழற்சி முறையில் ஆதிஷிக்கு பாதுகாப்பு வழங்குவர் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக முதல்வர் ஆதிஷி இன்று ( செப்.,25) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் டில்லியில் அமைப்பு சாரா தொழிலாளர்களில் திறமையில்லா தொழிலாளர்களின் ஊதியம் ரூ. 18 ஆயிரத்து 66 லிருந்து ரூ. 19 ஆயிரத்து 929 ஆகவும், அரைகுறை திறன் தொழிலாளர்களுக்கு ரூ. 21 ஆயிரத்து 917 ஆகவும் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.