சாலைகளில் குப்பை கொட்டாதீர் டில்லி முதல்வர் வேண்டுகோள்
சாலைகளில் குப்பை கொட்டாதீர் டில்லி முதல்வர் வேண்டுகோள்
ADDED : ஆக 14, 2025 09:28 PM

புதுடில்லி:''பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகள் மற்றும் சாலையோரங்களில் குப்பையை கொட்டாமல் இருக்க வேண்டும். அதுபோல, இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது, கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதன் மூலம் தங்களின் தேச பக்தியை வெளிக்காட்ட வேண்டும்,'' என, டில்லி முதல்வர் ரேகா குப்தா கேட்டுக் கொண்டார்.
டில்லி கன்னாட் பிளேஸ் பகுதியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கி வைத்த முதல்வர் ரேகா குப்தாவுடன், பா.ஜ., - எம்.பி., பன்சூரி ஸ்வராஜ், டில்லி போக்குவரத்து துறை அமைச்சர் பங்கஜ் சிங், தலைமை செயலர் தர்மேந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அந்த நிகழ்ச்சியில், முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:
இன்று, நம் நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். அதை முன்னிட்டும், தேச பக்தியை வெளிப்படுத்தும் விதமாகவும், இன்று முதல், தங்கள் வீடுகள் மற்றும் சாலையோரங்களில் குப்பை கொட்ட மாட்டோம் என்ற உறுதியை அனைவரும் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம், ஹெல்மெட் அணிய வேண்டும். வெறுமனே ெஹல்மெட்டை மட்டும் தலையில் கவிழ்த்து செல்லாமல், அதன் பட்டைகளை சரி வர போட வேண்டும்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மட்டுமின்றி, இந்த நாட்டை முன்னோக்கி இட்டுச் செல்லும் முயற்சியாக இவை இருக்க வேண்டும். நம் வாழும் நகரை, துாய்மையாக பராமரிக்க வேண்டும்.
எதிரிகளின் துப்பாக்கிகளில் இருந்து வெளிவரும் தோட்டாக்களை நாம் சந்திக்க வாய்ப்பில்லை. நம் தேச பக்தியை, இதுபோன்ற சிறிய நிகழ்வுகள் வாயிலாக காட்டலாம்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
அதுபோலவே, பன்சூரி எம்.பி.,யும் பேசினார். டில்லி போக்குவரத்து துறை அமைச்சர் பங்கஜ் சிங்,''மாநில மக்கள் அனைவரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்,'' என, கேட்டுக் கொண்டார்.