டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 6வது முறையாக ஈ.டி., சம்மன்
டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 6வது முறையாக ஈ.டி., சம்மன்
ADDED : பிப் 15, 2024 01:08 AM
புதுடில்லி, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஆறாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
டில்லி அரசு 2021- ---- 2022ம் நிதியாண்டில் புதிய மதுபானக் கொள்கையை வகுத்தது. இதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின்படி, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.
இதை அடிப்படையாக வைத்து அமலாக்கத் துறையும் பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில், டில்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் பெயர் இடம் பெற்றுள்ளது.
இந்த வழக்கில் பணமோசடி தொடர்பாக டில்லி முதல்வர் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த ஏற்கனவே கடந்த ஆண்டு நவ.,2 டிச.,21, இந்த ஆண்டு ஜன.,3, ஜன.,18, பிப்.,2 என ஐந்து முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் ஐந்து முறையும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
மேலும் இந்த சம்மன் சட்ட விரோதமானது என்று கெஜ்ரிவால் கூறிவருகிறார். இதனால் இந்த வழக்கில் சம்மனுக்கு கீழ்படியாததற்காக அமலாக்கத்துறை தாக்கல் செய்த புகாரின் பேரில், டில்லி நீதிமன்றம் கடந்த வாரம் கெஜ்ரிவாலை பிப்., 17 ல் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டது. மேலும் அவர் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர் என்றும் தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, பண மோசடி வழக்கில் 19ம் தேதி ஆஜராகும்படி 6வது முறையாக கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை நேற்று மீண்டும் சம்மன் அனுப்பியது.

