UPDATED : பிப் 18, 2025 03:15 PM
ADDED : பிப் 18, 2025 03:11 PM

புதுடில்லி: டில்லி முதல்வரின் பதவியேற்பு விழா பிப்ரவரி 20ம் தேதி நடைபெறும் என்று பா.ஜ., வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
டில்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பா.ஜ., பிடித்துள்ளது. வெற்றி பெற்ற பா.ஜ.,வின் புதிய அரசு வரும் பிப்.20ம் தேதி வியாழன் அன்று காலை 11 மணிக்கு பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ., சட்டமன்றக் கட்சிக் கூட்டம் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறும்.
பதவியேற்பு விழாவிற்கு ராம் லீலா மைதானத்தில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
டில்லி முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகனும், ஆம்ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்தவருமான பர்வேஷ் வர்மா முதல்வருக்கான போட்டியில் இருக்கிறார்.
அதேபோல, முன்னாள் மாநில பா.ஜ., தலைவர் மனோஜ் திவாரியும் முதல்வருக்கான ரேஸில் நீடிக்கிறார். இருவரில் யாரேனும் ஒருவர் முதல்வராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டமன்றக் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் கூட்டத்தில் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்களும் டில்லியின் ஏழு எம்.பி.க்களும் கலந்து கொள்வார்கள். அதை தொடர்ந்து தலைவர் துணை நிலை கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார்.
50க்கும் மேற்பட்ட திரைப்பட நட்சத்திரங்கள்,
பிரபல தொழிலதிபர்கள்,
பாபா ராம்தேவ், சுவாமி சிதானந்தா, பாபா பாகேஷ்வர் தீரேந்திர சாஸ்திரி
மற்றும் முக்கிய நாடுகளைச் சேர்ந்த தூதர்களும் அழைக்கப்படுகிறார்கள்.
மத்திய அரசு திட்டங்களின் பயனாளிகள், பிற மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ., தலைவர்கள் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

