ஹோட்டல் டெண்டர் முறைகேடு வழக்கு; தேஜஸ்விக்கு சிக்கல்
ஹோட்டல் டெண்டர் முறைகேடு வழக்கு; தேஜஸ்விக்கு சிக்கல்
ADDED : அக் 13, 2025 01:12 PM

புதுடில்லி: ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீஹார் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு இண்டி கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும், பீஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009 வரையில் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தார். அவரது இந்தப் பதவி காலத்தில், ராஞ்சி மற்றும் பூரியில் உள்ள இந்திய ரயில்வேவுக்கு சொந்தமான ஹோட்டல்களின் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை தனியாருக்கு டெண்டர் விட்டதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக லாலு பிரசாத் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி உள்பட குடும்பத்தினர், இந்திய ரயில்வே அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மேலும், இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக குற்றம்சாட்டப்பட்டவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, முன்னாள் அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இது அவரது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பீஹாருக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேஜஸ்வி யாதவ் மற்றும் அவரது தந்தை மீது முறைகேடு புகாரில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது இண்டி கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.