ADDED : ஜன 16, 2025 09:34 PM
ரோஸ் அவென்யூ:முன்னாள் காங்கிரஸ் எம்.பி., சந்தீப் தீட்சித் தாக்கல் செய்த கிரிமினல் அவதூறு வழக்கில், முதல்வர் ஆதிஷி, ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் ஆகியோருக்கு 'நோட்டீஸ்' அனுப்ப டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுடில்லி சட்டசபைத் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக முன்னாள் காங்கிரஸ் எம்.பி., சந்தீப் தீட்சித் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது, சந்தீப் தீட்சித் பா.ஜ.,விடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் வாங்கியது மட்டுமல்லாமல், ஆம் ஆத்மியை தோற்கடிக்க பா.ஜ.,வுடன் காங்கிரஸ் மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக முதல்வர் ஆதிஷி மற்றும் ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிட்டி கூடுதல் தலைமை நீதிமன்றத்தில் முதல்வர் ஆதிஷி மற்றும் ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் ஆகியோருக்கு எதிராக கிரிமினல் அவதுாறு வழக்கை சந்தீப் தீட்சித் தொடர்ந்துள்ளார். மனுவில், 'ஆதிஷியும் சஞ்சய் சிங் ஆகிய இருவும் வேண்டுமென்றே என் நல்லெண்ணத்திற்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் அவதுாறு பரப்புகின்றனர்' என, தீட்சித் கூறியிருந்தார்.
இந்த வழக்கு கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி பராஸ் தலால் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் வரும் 27ம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்யும்படி ஆதிஷி, சஞ்சய் சிங் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையை 27ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.