மத்திய பொதுப்பணித்துறைக்கு டில்லி வனத்துறை நோட்டீஸ்
மத்திய பொதுப்பணித்துறைக்கு டில்லி வனத்துறை நோட்டீஸ்
ADDED : ஏப் 12, 2025 12:27 AM
துவாரகா:துவாரகாவில் 100 மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக, மத்திய பொதுப்பணித் துறை மற்றும் தேசிய நோய் எதிர்ப்பு நிறுவனத்திற்கு டில்லி வனத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
துவாரகாவின் செக்டார் 5ல் தேசிய நோய் எதிர்ப்பு நிறுவனத்திற்கு சொந்தமான நிலம் உள்ளது. இங்கு நுாற்றுக்கணக்கான மரங்கள் வளர்ந்திருந்தன. இந்த நிலத்தில் ஒரு கட்டடம் எழுப்ப தேசிய நோய் எதிர்ப்பு நிறுவனம் திட்டமிட்டது.
இதற்கான பணிகளை மத்திய பொதுப்பணித்துறை மேற்கொள்கிறது. இதற்காக சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்த மரங்களை வெட்டி அகற்றும் பணி கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.
'குட்டி காடு' போல் இருந்த அந்தப் பகுதியில் மரங்கள் வெட்டப்படுவது குறித்து, மாநில வனத்துறையின் கவனத்திற்கு அப்பகுதி மக்கள் கொண்டு சென்றனர். அப்போது தான், மரங்கள் வெட்டுவதற்கு உரிய அனுமதி பெறாதது தெரிய வந்தது.
நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட பகுதியை டில்லி வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மரங்கள் வெட்டப்பட்டதை உறுதி செய்தனர். மேற்கொண்டு மரங்கள் வெட்டுவதற்கு தடை விதித்தனர்.
இதுகுறித்து டில்லி வனம் மற்றும் வனவிலங்குத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
டில்லி மரப்பாதுகாப்புச் சட்டம் - 1994ன் படி, ஒரு மரத்தை வெட்டுவதற்கு கூட இங்கு துறையின் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் செக்டார் 5ல் அனுமதியின்றி 100க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
இதுகுறித்து மத்திய பொதுப்பணித் துறை மற்றும் தேசிய நோய் எதிர்ப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மரங்கள் வெட்ட பயன்படுத்திய இயந்திரங்கள், பொக்லைன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.