ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் டில்லி அரசு முடிவு
ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் டில்லி அரசு முடிவு
ADDED : ஏப் 19, 2025 10:15 PM
புதுடில்லி:வெள்ளத் தடுப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகளை தீர்க்க, அரசின் அனைத்து துறைகளின் பணிகளையும் மேம்படுத்த, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படுகிறது.
இதுகுறித்து, டில்லி அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் ரேகா குப்தா மாநகர் முழுதும் விரிவான ஆய்வு செய்தார். அதன்பின் மின்சாரம், பொதுப்பணி, சுகாதாரம், போக்குவரத்து, போலீஸ் உள்ளிட்ட துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். டில்லி மாநகரில் நெரிசல் ஏற்படும் 233 இடங்கள் போக்குவரத்து போலீசாரால் கண்டறியப்பட்டுள்ளன.
அந்தக் கூட்டத்தில், வெள்ளத் தடுப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இறுதியில், அனைத்து துறை பணிகளையும் மேம்படுத்தும் விதமாக ஒருங்கிணைந்த கட்டுபாட்டு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் அனைத்து துறை பணிகளும் தொய்வின்றி விரைவாக நடக்கும்.
அதேபோல, 4,780 இருண்ட பகுதிகள் கண்டறியப்பட்டு, பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 3,000 இடங்களில் இருண்ட இடங்களில் 1,989 இடங்களில் தெரு விளக்குகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களிலும் தெருவிளக்குகளை சீரமைக்கும் பணி 10 நாட்களில் நிறைவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.

