சத் பண்டிகையை சிறப்பாக கொண்டாட டில்லி அரசின் ஏற்பாடுகளுக்கு கூட்டம்
சத் பண்டிகையை சிறப்பாக கொண்டாட டில்லி அரசின் ஏற்பாடுகளுக்கு கூட்டம்
ADDED : அக் 24, 2025 02:52 AM

புதுடில்லி:''டில்லியில் இந்த ஆண்டு நடைபெறும் சத் பூஜையின் போது, சுத்தமான சுற்றுச்சூழல் பின்பற்றப்படும்,'' என, டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறினார்.
டில்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா தலைமையில் நடந்த சிறப்பு கூட்டத்தில், சத் பூஜை எனப்படும் சூரிய கடவுளை பெண்கள் வணங்குவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அந்த கூட்டத்தில், டில்லி கலாசாரத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா மற்றும் டில்லி, ஹரியானா மாநிலங்களின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின், நிருபர்களை சந்தித்த, முதல்வர் ரேகா குப்தா, ''சத் பூஜையை சிறப்பாக கொண்டாடுவதற்கான உயர் மட்டக் கூட்டம் கூடி விவாதித்தோம். அதில், துணை நிலை ஆளுநர் பங்கேற்றார். ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் முதல்வர்களுடனும் போனில் பேசினோம். சத் பூஜை நாட்களில், மாநில அரசுக்கு விடுமுறை விடப்படுவது குறித்து, முடி வெடுக்கப்படும்,'' என்றார்.
பூர்வாஞ்சல் பகுதி மக்கள் எனப்படும், பூர்வாஞ்சலிகளின் முக்கிய விரதமான சத் பூஜையை, உத்தர பிரதேசம், பீஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் பெண்கள் விமரிசையாக கொண்டாடுகின்றனர்.

