யமுனை கரையில் துணை ராணுவ பாதுகாப்பு மத்திய அரசுக்கு டில்லி அரசு கோரிக்கை
யமுனை கரையில் துணை ராணுவ பாதுகாப்பு மத்திய அரசுக்கு டில்லி அரசு கோரிக்கை
ADDED : ஆக 14, 2025 02:46 AM

புதுடில்லி:“யமுனை நதிக்கரையை துாய்மையாக பராமரிக்க, துணை ராணுவப் படையை அனுப்ப, மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,”என, பொதுப்பணித் துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா கூறினார்.
டில்லி மாநகரை தூய்மைப்படுத்தும், 'டில்லி டு குடே சே ஆசாதி' சிறப்பு இயக்கம், 1ம் தேதி துவங்கியது. இம்மாதம், 31ம் தேதிக்குள் மாநகர் முழுதையும் சுத்தம் செய்யும் பணியை நிறைவேற்ற தீவிரமாக பணிகள் நடக்கிறது.
முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், தொண்டு நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் உட்பட பல்வேறு தரப்பினரும் குப்பை அகற்றும் பணியில் மும் முரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஐ.டி.ஓ., அருகே யமுனை காட் பகுதியில் நேற்று நடந்த நிகழச்சியில் பங்கேற்ற பொதுப்பணி அமைச்சர் பர்வேஷ் வர்மா கூறியதாவது:
யமுனை நதிக்கரையில் குப்பை கொட்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். பல்வேறு பிரார்த்தனைகள், வழிபாடுகள் நடத்த யமுனை கரைக்கு ஏராளமான மக்கள் வருகின்றனர்.
ஆனால், செல்லும் போது பிளாஸ்டிக் பை உட்பட பயன்படுத்திய பொருட்களை யமுனை கரையிலேயே போட்டுவிட்டுச் செல்கின்றனர். இதனால், யமுனை நதிக்கரை மட்டுமின்றி நதியும் மாசு அடைந்துள்ளது.
டில்லி அரசு நடத்தும் ஒரு மாத துாய்மை இயக்கத்தில் யமுனை நதிக்கரையும் மீட்டெடுக்கப்படும். யமுனைக் கரையை தூய்மையாகப் பராமரிக்க துணை ராணுவத்தை அனுப்ப மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

