தமிழ் சங்க பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் மோசடி; மானிய உதவிகளை நிறுத்தியது டில்லி அரசு
தமிழ் சங்க பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் மோசடி; மானிய உதவிகளை நிறுத்தியது டில்லி அரசு
ADDED : நவ 12, 2025 03:18 AM

டி ல்லியில், தமிழ் கல்விச் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் பள்ளிகளுக்கு மானிய உதவி வழங்க அம்மாநில அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் நியமன விவகாரத்தில் டில்லி தமிழ் கல்விச் சங்கம் முறைகேடுகளில் ஈடுபட்டதால், மானிய உதவிகள் வழங்க மறுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
சம்பளத் தொகை தலைநகர் டில்லியில் வசிக்கும் தமிழர்களுக்காக, டில்லி தமிழ் கல்வி சங்கம் கடந்த, 1923ல் பள்ளிகளை நிறுவியது.
தற்போது, ஏழு பள்ளிகள் வரை விரிவடைந்துள்ளன. இந்த பள்ளிகளுக்கு கவுரவ செயலராக ராஜு ராமசுவாமி பதவி வகித்து வருகிறார்.
ஆசிரியர்களுக்கான சம்பளம் மற் றும் பிற செலவினங்களுக்கு, டில்லி அரசு தொடர்ந்து மானிய உதவிகள் வழங்கி வருகிறது. குறிப்பாக பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளத் தொகையில், 95 சதவீதத்தை அரசே வழங்கும். அதே போல் பிற செலவுகளையும் ஏற்றுக்கொள்ளும்.
இதை பெற, டில்லி தமிழ் கல்விச் சங்கம் தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்து பணியமர்த்த வேண்டும்.
இந்நிலையில், தன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஏழு பள்ளிகளில் ஆசிரியர்கள், ஊழியர்கள் என, 100 பேரை நியமித்து அதற்கான பட்டியலை கல்வி சங்கம் அனுப்பியது.
அதை டில்லி பள்ளி கல்வித்துறை பரிசீலித்த போது, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் பல முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நேர்காணல் இதையடுத்து டில்லி தமிழ் கல்விச் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் பள்ளிகளுக்கான மானிய உதவிகளை, டில்லி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
அடிப்படை விதிகள் மீறப்பட்டு தகுதியே இல்லாதவர்களுக்கு ஆசிரியர் பணி நியமனங்கள் வழங்கப்பட்டிருப்பதும், வெளிப்படைத்தன்மை இல்லாமல் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான நேர்காணல்கள் நடத்தப் பட் டிருப்பதும் கண்டறியப் பட்டுள்ளது.
டில்லி பள்ளிக்கல்வித் துறையின் முன்னாள் இயக்குநர் உதித் பிரகாஷ் ராயின் மனைவிக்கு போலி ஆசிரியர் அனுபவ சான்றிதழ்களை சமர்பித்து, டில்லி தமிழ் கல்வி சங்கப் பள்ளியில் ஆசிரியரா க நியமித்த முறைகேடும் அம்பலமானது.
எனவே, புதிதாக பணி நியமனங்களை துவங்கும்படி உத்தரவிட்டுள்ளது. இம்முறை தகுதிவாய்ந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே மானிய உதவிகள் கிடைக்கும் என்றும், இல்லாவிட்டால் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -

