போக்சோ வழக்கில் விடுவிப்பு சரியே டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு
போக்சோ வழக்கில் விடுவிப்பு சரியே டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு
ADDED : ஜூன் 19, 2025 07:08 PM
புதுடில்லி:போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவரை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி மாற்ற விரும்பவில்லை. விடுதலை செய்யப்பட்டவரை, அவ்வாறே தொடர உத்தரவிட்டார்.
டில்லி தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய பெண் ஒருவரை, அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என, 2015ல், அந்த நபர் மீது போக்சோ வழக்கு தொடரப்பட்டு, கைது செய்யப்பட்டார். உயர் நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டார்.
அதை எதிர்த்து, 2018ல், டில்லி மாநில அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், தன் முந்தைய உத்தரவை சரி என்று கூறிய டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி அமித் மகாஜன், ஜூன் 17 ல் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்த பெண்ணை, அதன் உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என, 2015ம் ஆண்டு ஏப்ரல் 1ல் கூறப்பட்டது. இந்த வழக்கில் அந்த பெண், பத்து நாட்களுக்கு பின், போலீசில் புகார் அளித்தார். அதுவரை, அந்த பெண், அதே தொழிற்சாலையில் பணியாற்றினார். அவர் அனைவருடனும் சகஜமாகவே பணியாற்றினார்.
அந்த பெண், பின், அந்த தொழிற்சாலை உரிமையாளர் மீது போலீசில் புகார் அளித்தார். அதற்குப் பின், அவர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், அந்த பெண் மீதான தவறு நன்றாக தெரிகிறது. அவர் வேண்டுமென்றே, தொழிற்சாலை உரிமையாளரை வழக்கில் சிக்க வைக்க முயன்றுள்ளார்.
எதற்காக வழக்கு பதிவு செய்ய தாமதம் ஆனது என்பது குறித்து, அரசு தரப்பில் நிரூபிக்கப்படவில்லை. மேலும், அந்த பெண், தொழிற்சாலையின் உரிமையாளர் மனைவியுடன் நல்ல முறையில் தான் பழகி வந்தார். எனவே, தொழிற்சாலை உரிமையாளரை வழக்கிலிருந்து விடுவித்து பிறப்பித்த உத்தரவு சரியானதே.
இவ்வாறு நீதிபதி அமித் மகாஜன் உத்தரவிட்டார்.