மகளிர் ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர் நியமிக்க டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
மகளிர் ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர் நியமிக்க டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : பிப் 18, 2026 08:21 PM

புதுடில்லி: 'டில்லி மகளிர் ஆணையத்தில் காலியாக உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை நிரப்பி, ஆணையம் மூடப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்' என டில்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீஹார் மாநிலம் பக் ஷர் தொகுதி ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்.பி., சுதாகர் சிங், டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு: டில்லி மகளிர் ஆணையத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் நீண்ட மாதங்களாக நிரப்பப்படவில்லை. பெண்களின் நலனுக்காக துவக்கப்பட்ட இந்த ஆணையத்தில் போதுமான ஊழியர்களும் இல்லை. கடந்த ஜனவரி மாதம், 24ம் தேதி டில்லி மகளிர் ஆணையம் மூடப்பட்டு விட்டது.
டில்லியின் முதல்வராக ஒரு பெண் பதவி வகிக்கிறார். ஆனால், பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக செயல்படும் ஆணையத்தை அவர் கண்டுகொள்ளவில்லை. பெண்களுக்கு எதிராக டில்லியில் தினமும் ஏராளமான குற்றங்கள் நடக்கின்றன.
குடும்ப ஆலோசனைப் பிரிவு, உதவி மையம், பாலியல் வன்முறை விசாரணை பிரிவுகளை தினமும் ஏராளமான பெண்கள் தொடர்பு கொண்டு உதவி பெற்று வந்தனர். ஆனால் தற்போது ஆணையம் மூடப்பட்டுள்ளதால், டில்லியில் வசிக்கும் பெண்களுக்கு போதிய ஆலோசனை, பாதுகாப்பு மற்றும் உதவிகள் கிடைக்கவில்லை.
கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியிடப்பட்ட தேசிய குற்றப் பதிவு காப்பக அறிக்கையில், 2023ம் ஆண்டு மட்டும் டில்லியில் பெண்களுக்கு எதிராக 13,000 குற்றச் சம்பவங்கள் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை பாலியல் வன்கொடுமை வழக்குகள். பெண்கள் மீது பாலின வன்முறை குற்றங்கள் நடக்கும் மாநகரில் பெண்களைப் பாதுகாக்க பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சட்டப்பூர்வ ஆணையம் முடக்கப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.
டில்லி மகளிர் ஆணையம் மூடப்பட்டு இருப்பது அரசியலமைபு சட்டம் 14, 15(3) மற்றும் 21 ஆகிய பிரிவுகளை மீறும் செயல். எனவே, டில்லி மகளிர் ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களை உடனடியாக நியமிக்க, டில்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா, நீதிபதி தேஜாஸ் காரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சத்யம் சிங் ஆஜரானார். டில்லி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்களை சரிபார்க்க அவகாசம் வேண்டும்'என கோரிக்கை விடுத்தார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: டில்லி மகளிர் ஆணையத்தில் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களை நியமிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளிர் ஆணையம் மூடப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பெண்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட ஆணையத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்காமல் இருப்பதற்கு எந்த காரணமும் இருக்க முடியாது. அடுத்த விசாரணையின் போது, டில்லி அரசின் விளக்கத்தை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை, 25ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

