பிரிட்டிஷ்காரரா ராகுல்? பொதுநல வழக்காக விசாரிப்பு!
பிரிட்டிஷ்காரரா ராகுல்? பொதுநல வழக்காக விசாரிப்பு!
UPDATED : ஆக 21, 2024 03:07 AM
ADDED : ஆக 21, 2024 03:02 AM

புதுடில்லி : காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் குடியுரிமையை ரத்து செய்யக் கோரும் சுப்பிரமணியன் சாமியின் மனுவை, பொதுநல வழக்காக விசாரிக்க டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, 2019ல் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
ஒன்பதாவது பிரிவு
'ஐரோப்பிய நாடான பிரிட்டனில் ஒரு நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக ராகுல் இருந்துள்ளார்.
'இது தொடர்பாக, அந்த நிறுவனத்தின் ஆவணங்களில், தன் குடியுரிமையை பிரிட்டிஷ் என்று அவர் அறிவித்துள்ளார்.
'இதன் வாயிலாக நம் அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது பிரிவு மற்றும் இந்தியக் குடியுரிமைச் சட்டத்தை அவர் மீறியுள்ளார். அதனால், அவருடைய இந்திய குடியுரிமை ரத்து செய்ய வேண்டும்' என, அதில் கூறியிருந்தார்.
இந்தக் கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரி, அவர் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி சஞ்சிவ் நிருலா முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அதிகாரம் இல்லை
அப்போது, 'இதுபோன்ற வழக்கு தொடர்வதற்கு சட்டப்பூர்வமாக, சுப்பிரமணியன் சாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை' என, நீதிபதி குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து, நாட்டின் பொதுநலன் சார்ந்தே வழக்கை தொடர்ந்துள்ளதாக சாமி குறிப்பிட்டார். அதை ஏற்ற நீதிபதி, இந்த மனுவை, பொதுநல வழக்காக கருதி, உரிய அமர்வின் விசாரணைக்கு மாற்றுவதற்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.

