‛முதல்வர் எப்படி சொல்லலாம்?' ரேவந்த் ரெட்டியை கண்டித்த உச்சநீதிமன்றம்
‛முதல்வர் எப்படி சொல்லலாம்?' ரேவந்த் ரெட்டியை கண்டித்த உச்சநீதிமன்றம்
ADDED : ஆக 29, 2024 05:58 PM

புதுடில்லி: தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுக்கு ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றத்தின் உத்தரவை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்த அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியை நீதிபதிகள் கண்டித்து உள்ளனர்.
டில்லி மதுபான ஊழல் வழக்கில் பாரத் ராஷ்ட்ர சமிதியைச் சேர்ந்த கவிதாவுக்கு ஐந்து மாத சிறைவாசத்திற்கு பிறகு நேற்று முன்தினம் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறுகையில், ‛‛பா.ஜ.,வுக்கும், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கவிதாவுக்கு ஜாமின் கிடைத்தது'' என்றார்.
இந்நிலையில், முதல்வர் ரேவ்ந்த் ரெட்டி, கடந்த 2015ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த போது தெலுங்கானா சட்டமேலவைக்கு நடந்த தேர்தலின் போது ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த வழக்கை ம.பி., மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை நீதிபதிகள் பிஆர் கவாய், பிகே மிஸ்ரா, கேவி விஸ்வநாதன் அமர்வு விசாரித்தது.
அப்போது, ரேவந்த் ரெட்டியின் கருத்து குறித்து நீதிபதி கவாய் கூறியதாவது: ரேவந்த் ரெட்டி என்ன சொன்னார் என்பதை படித்து பார்த்தீர்களா? முதல்வரின் இத்தகைய அறிக்கைகள் ஒரு அச்சத்தை ஏற்படுத்தக்கூடும். அரசியல்வாதிகளுக்கும் நீதித்துறையில் உள்ளவர்களுக்கு பரஸ்பர ஒப்பந்தம் உள்ளது என அரசியல்சாசன பதவியில் இருக்கும் ஒருவர் கூறலாமா? அரசியல் காரணங்களுக்காக உத்தரவு பிறப்பிக்கிறோம் என எப்படி சொல்ல முடியும்? நீதித்துறையை மதிக்காவிட்டால், விசாரணையை வேறு எங்காவது மாற்றுவோம். நாட்டில் உச்சபட்ச நீதிமன்றம் இதுதான். இவ்வாறு அவர் கூறினார்.