ரயில் உணவில் நெளிந்தது பூரான்; வி.ஐ.பி., வகுப்பு பயணி கொந்தளிப்பு
ரயில் உணவில் நெளிந்தது பூரான்; வி.ஐ.பி., வகுப்பு பயணி கொந்தளிப்பு
ADDED : அக் 22, 2024 12:34 PM

புதுடில்லி; புதுடில்லியில் ரயிலில் தரப்பட்ட உணவில் பூரான் உயிருடன் நெளிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக ரயில்களில் தரப்படும் உணவு வகைகளின் தரம் என்பது பல நேரங்களில் கேள்விக்குறியாக பார்க்கப்படுகிறது. சுத்தமாக இல்லை, கெட்டு போன உணவு விநியோகம் என புகார் பட்டியலை மக்கள் இப்பவும் வாசித்து வருகின்றனர்.
அதில் லேட்டஸ்ட்டாக ரயிலில் தரப்பட்ட உணவில் பூரான் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு;
டெல்லியைச் சேர்ந்தவர் ஆரயன்ஷ் சிங். இவர் சில நாட்கள் முன்பு ரயில் ஒன்றில் வி.ஐ.பி. க்ளாசில் பயணம் செய்திருக்கிறார். அப்போது ரயிலில் அவருக்கு உணவு வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த உணவை ஆரயன்ஷ் சிங் எடுத்துச் சென்று அங்குள்ள ரயில்வே ஊழியர்களிடம் காட்டி உள்ளார். மேலும், சக பயணிகள் முன்பு எழுந்து நின்று, 'உணவில் பூரான் இருக்கிறது. யாரும் உணவு அருந்த வேண்டாம்' என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.
இவருக்கு நடந்த அனுபவத்தை கண்ட சக பயணிகள் அனைவரும் எழுந்து வந்து பூரான் கிடந்த உணவை பார்த்துவிட்டு அதிருப்தி அடைந்தனர். பின்னர் அவரவர் இருக்கைக்கு சென்று தங்களுக்கு வழங்கப்பட்ட உணவை அருந்தினர்.
தமக்கு நடந்த மோசமான அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்த ஆரயன்ஷ் சிங், சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறி உள்ளதாவது;
ரயிலில் வி.ஐ.பி. பிரிவில் தரப்படும் உணவின் தரம் இப்படி இருக்கும் போது, வழக்கமான ரயில்களில் விநியோகிக்கப்படும் சாதாரண உணவின் தரம் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள். அதிக புரதத்துடன் கூடிய உணவை எனக்கு வழங்கி உள்ளனர்.
இவ்வாறு அந்த பதிவில் ஆரயன்ஷ் சிங் குறிப்பிட்டுள்ளார். பயணியின் இந்த குற்றச்சாட்டு வீடியோ வைரல் ஆன நிலையில், ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்து பதிவு ஒன்றை எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;
தங்களுக்கு நேர்ந்த அனுபவத்திற்கு வருந்துகிறோம். அதன் முழு விவரத்தையும் எங்களுக்கு தெரிவியுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கிறோம்.
இவ்வாறு அந்த பதிவில் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

