ADDED : டிச 05, 2024 07:30 AM

பெங்களூரு: சட்டசபை குளிர்கால கூட்டத் தொடர் நடக்கும் பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில், மூத்த எம்.எல்.ஏ.,வும், டில்லி சிறப்பு பிரதிநிதியுமான ஜெயசந்திராவுக்கு அறை ஒதுக்கப்படாததால், அதிருப்தி அடைந்துள்ளார்.
பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில், 9ம் தேதி முதல், 19 வரை சட்டசபை குளிர்காலக் கூட்டத்தொடர் நடக்கவுள்ளது. கூட்டம் முடியும் வரை, சுவர்ண விதான் சவுதாவில் தங்கி முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பணியாற்றுவர். இவர்களுக்கு அறைகள் ஒதுக்கி, ஊழியர் மற்றும் நிர்வாக மேம்பாட்டு துறை, நேற்று உத்தரவிட்டது.
ஆனால் காங்கிரஸ் அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியும், மூத்த எம்.எல்.ஏ.,வுமான ஜெயசந்திராவுக்கு, சுவர்ண விதான் சவுதாவில் அறை ஒதுக்கப்படவில்லை. இதனால் அவர் அதிருப்தி அடைந்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அமைந்தபோது, ஜெயசந்திரா அமைச்சர் பதவி எதிர்பார்த்தார். பதவி கிடைக்காததால் கோபத்தில் இருந்த அவரை சமாதானம் செய்ய, டில்லி சிறப்பு பிரதிநிதி பதவி வழங்கப்பட்டது.
அதன்பின் அவரை கட்சி கைகழுவியதாக வருத்தத்தில் இருந்தார். இப்போதும் மூத்த எம்.எல்.ஏ.,வும், டில்லி சிறப்பு பிரதிநிதியுமான தனக்கு, சுவர்ண விதான் சவுதாவில் அறை ஒதுக்காததால், ஜெயசந்திரா அதிருப்தி அடைந்துள்ளார்.