ராக்கெட் தயாரிக்க முயன்ற சதி கும்பல்; என்ஐஏ விசாரணையில் அதிர்ச்சி தகவல்
ராக்கெட் தயாரிக்க முயன்ற சதி கும்பல்; என்ஐஏ விசாரணையில் அதிர்ச்சி தகவல்
UPDATED : நவ 17, 2025 07:07 PM
ADDED : நவ 17, 2025 06:54 PM

புதுடில்லி: டில்லியில் கார் வெடிகுண்டு மூலம் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவனை என்ஐஏ கைது செய்துள்ளது. இவன் டிரோன்களை ராக்கெட் போல தயாரித்து தாக்குதல் நடத்த முயன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த நவ.,10ம் தேதி டில்லி செங்கோட்டை அருகே உமர் நபி என்பவன் காரில் வெடிமருந்துகளை நிரப்பிச் சென்று தற்கொலைப்படை தாக்குதலை நடத்தினான். இதில், 3 பயங்கரவாதிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, டில்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், பலியானோர் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்கள் லுக்மான்,50, விநாயக் பாதக்,50, என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர்-. விரைவில் அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.
டில்லி தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் தொடர்பாக 'ஒயிட் காலர்' பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வந்த டாக்டர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலு, தற்கொலைப்படை தாக்குதலுக்கு கார் வாங்கிக் கொடுத்த முக்கிய நபரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், டில்லி தற்கொலைப் படை தாக்குதலில் தொடர்புடைய ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்த ஜசிர் பிலால் வானி என்பவனை என்ஐஏ அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். இவன், டிரோன்களை மாற்றம் செய்தும், ராக்கெட்டுகளை தயாரிக்க முயற்சி செய்தும், தொழில்நுட்ப ரீதியாக சதிகாரர்களுக்கு உடந்தையாக இருந்துள்ளான்.

