டில்லி வியாபாரிகள் கடையடைப்பு மார்க்கெட்டுகள் வெறிச்சோடிக் கிடந்தன
டில்லி வியாபாரிகள் கடையடைப்பு மார்க்கெட்டுகள் வெறிச்சோடிக் கிடந்தன
ADDED : ஏப் 25, 2025 11:25 PM

புதுடில்லி:ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமி நடந்த பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து, தலைநகர் டில்லியில் நேற்று 'பந்த்' நடத்தினர். அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு மாநகரின் பல பகுதிகள் வெறிச்சோடிக் கிடந்தன.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், 22ம் தேதி ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள், சுற்றுலாப் பயணியரை சரமாரியாக சுட்டுத் தள்ளி விட்டு தப்பினர். இந்த திடீர் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்தும், உயிரிழந்தோர் குடும்த்தினருக்கு அனுதாபம் தெரிவித்தும், டில்லி வர்த்தக மற்ரும் தொழிற்துறை சபை நேற்று, 'பந்த்' அறிவித்து இருந்தனர்.
கன்னாட் பிளேஸ், சதர் பஜார் மற்றும் சாந்தினி சவுக் உட்பட மாநகரம் முழுக்க அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு மாநகரமே வெறிச்சோடிக் காணப்பட்டது.
அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு, 'டில்லியில் நேற்று 8 லட்சம் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால், ஒரு நாளில் மட்டும் 1,500 கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்பட்டது' என கூறியுள்ளது.
கன்னாட் பிளேஸில் நடந்த மெழுகுவர்த்தி பேரணியில் ஏராளமான வியாபாரிகள் பங்கேற்றனர்.
கூட்டமைப்புத் தலைவர் பிரிஜேஷ் கோயல் கூறியதாவது:
இது வெறும் போராட்டம் மட்டுமல்ல. பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டு நிலைப்பாடு. இந்தப் போராட்டத்தால் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். பஹல்காமில் உயிரிழந்தோர் நினைவாக இந்தக் கடையடைப்பு நடத்தப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானுடன் அனைத்து வணிக உறவுகளையும் துண்டிக்க வேண்டும். அதேபோல பாகிஸ்தான் நாட்டு பொருட்களை நம் நாட்டினர் புறக்கணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எப்போதும், பரபரப்பாக இருக்கும் சதர் பஜார் நேற்று வெறிச்சோடிக் கிடந்தது. அதேபோல், ஆசியாவின் மிகப்பெரிய காந்திநகர் ரெடிமேட் ஆடை மொத்த விற்பனை மார்க்கெட்டில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு இருந்தன.