ஒரு நாள் மழைக்கே தாக்குபிடிக்காத டில்லி போக்குவரத்து கடும் பாதிப்பு; மக்கள் அவதி
ஒரு நாள் மழைக்கே தாக்குபிடிக்காத டில்லி போக்குவரத்து கடும் பாதிப்பு; மக்கள் அவதி
ADDED : ஜூலை 10, 2025 10:21 PM

புதுடில்லி:டில்லியில் நேற்று பெய்த ஒரு நாள் மழைக்கே, தலைநகர் தள்ளாட்ட நகரமாக மாறி விட்டது. நேற்று காலையில் அலுவலகம் செல்ல முடியாமல், பலரும் தவித்தனர். 1 கி.மீ., துாரத்தை கடக்க, ஒரு மணி நேரத்திற்கும் மேலானதால், வாகன ஓட்டுகள் கடும் சிரமம் அடைந்தனர்.
டில்லியில், பருவமழை நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு துவங்கிய மழை, அதிகாலை வரை தொடர்ந்தது. சில மணி நேர மழைக்கே தாங்க முடியாமல், டில்லி நகரின் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. பல இடங்களில் நேற்று மதியம் வரை ஊழியர்கள் அலுவலகங்களுக்கு செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
குறிப்பாக, ஐ.டி.ஓ.,விலிருந்த ஓல்ட் ரோடக் சாலை, டில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை எண்: 8, மதுபான் சவுக் போன்ற பல இடங்களில் நேற்று காலையிலிருந்து போக்குவரத்து அதிகமாக இருந்தது. அந்த பகுதியில் மழை நீர் வடிகாலுக்கு சரியான ஏற்பாடுகள் செய்யாததாலும், மழை நீர் பாதிப்பாலும், சாலைகளில் குளம் போல தண்ணீர் தேங்கியது.
இதனால், அந்த பகுதிகளில் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. டில்லி நகரின் பல பகுதிகளில் இதே நிலை தான் காணப்பட்டது. ஷாதிபூர் பகுதியில் வாகனங்கள், பம்பர் - டூ - பம்பர் நெரிசலில் சிக்கித் தவித்தன. வாகனங்களில், ஒரு கி.மீ., செல்ல, ஒரு மணி நேரத்திற்கும் மேலானதால், பயணியர் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
அதுபோல, நங்லோய் - நஜப்கார் செல்லும் பாதைகளிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. மேலும், நங்லோயிலிருந்து முண்ட்கா வழித்தடத்தில் சாலைகளில் தண்ணீர் தேங்கி, ஆங்காங்கே குழிகளில் தேங்கி நின்ற தண்ணீரால் மக்கள் கடும் பாதிப்பு அடைந்தனர்.
தவுலா கான் அருகே, ராஜோக்ரி மற்றும் மஹிபால்பூர் போன்ற சாலைகளில், பல கி.மீ.,க்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. குறிப்பாக, ரோடு எண்: 40ல், ஜாஹிரா சுரங்க ரயில் பாதையில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால், அந்த வழியாக வந்த வாகனங்கள் பிற பாதைகளுக்கு திருப்பி விடப்பட்டன.
மேலும், தெற்கு டில்லியில் சராய் சாலே கான், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை, சப்தர்ஜங் மருத்துவமனை மற்றும் ஆஸ்ரம் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள், நத்தை ஊர்ந்தது போலவே சென்றன.
பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக, தங்கள் அவதியை பதிவிட்டனர். பல பயணியர், பத்திரிகை அலுவலகங்களை தொடர்பு கொண்டு, தாங்கள் செல்லும் வழியில் இருக்கும் தண்ணீர் நிலையை கேட்டபடி இருந்தனர்.

