ADDED : ஜன 08, 2024 10:57 PM

விஜயபுரா: ''எனது டில்லி பயணம் வெற்றிகரமாக இருந்தது,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கூறியுள்ளார்.
விஜயபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால். இவருக்கும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா குடும்பத்திற்கும் இடையில், 'பனிப்போர்' நிலவுகிறது. இது கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
இதனால் டில்லி வரும்படி, எத்னாலுக்கு மேலிடம் அழைப்பு விடுத்தது. கடந்த மாதம் இறுதியில் டில்லி சென்று திரும்பினார். டில்லி பயணம் குறித்து விஜயபுராவில், எத்னால் நேற்று அளித்த பேட்டி:
சமரச அரசியல்
மேலிட தலைவர்களிடம் இருந்து அழைப்பு வந்ததால், டில்லிக்குச் சென்றேன். எனது டில்லி பயணம் வெற்றிகரமாக இருந்தது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, கர்நாடகா பா.ஜ., பொறுப்பாளர் அருண்சிங்கை சந்தித்துப் பேசினேன்.
அமித்ஷா, நட்டாவுடன் அரைமணி நேரம் உரையாடினேன். மாநிலத்தில் நடக்கும் சமரச அரசியல் பற்றியும், கட்சிக்குள் எனக்கு இருக்கும் பிரச்னை குறித்து, அவர்களிடம் கூறினேன். விரைவில் அனைத்தும் சரி செய்யப்படும் என்று, உறுதி அளித்தனர்.
'ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தால், நேரடியாக என்னிடம் சொல்லுங்கள். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். உங்கள் மீது நம்பிக்கை உள்ளது' என, நட்டா என்னிடம் கூறினார். மேலிட தலைவர்களிடம் இருந்து, எனக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை. மரியாதையுடன் நடத்தினர்.
காங்கிரசுக்கு பதிலடி
மாவட்ட பா.ஜ., தலைவர்கள் மாற்றப்படுவது குறித்து, என்னிடம் தகவல் இல்லை. பா.ஜ.,வில் இருந்து நான் விலகிய போது, அமித் ஷா தான் மீண்டும் கட்சிக்கு வரும்படி அழைத்தார். எடியூரப்பா அழைத்து வரவில்லை. என்னை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு, எடியூரப்பா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுபற்றி மேலிட தலைவர் ஒருவர், என்னிடம் கூறினார்.
நாட்டில் மீண்டும் பா.ஜ., ஆட்சி வர வேண்டும். பிரதமர் மோடி இல்லாவிட்டால், ஹிந்துக்கள் இங்கு நிம்மதியாக வாழ முடியாது. மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.