தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ டில்லி உஷ் : இரண்டு 'பிசி'க்கள்!

டில்லி உஷ் : இரண்டு 'பிசி'க்கள்!

டில்லி உஷ் : இரண்டு 'பிசி'க்கள்!


UPDATED : மே 09, 2026 03:35 PM

ADDED : மே 09, 2026 03:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 09, 2026 03:35 PM ADDED : மே 09, 2026 03:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி, அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க., கூட்டணியில் இருந்த காங்., உறவை முறித்து, விஜய் கட்சி பக்கம் தாவியது. இதற்கு காரணமான இரண்டு, 'பிசி'க்கள் குறித்து, டில்லி அரசியல் வட்டாரங்களில் கிண்டலாக பேசப்படுகிறது.

'த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும்' என, பெரும்பாலான தமிழக காங்., தலைவர்கள் விரும்பினர். ஆனால், தி.மு.க.,வுடன் கூட்டணி தொடர செல்வப்பெருந்தகை விரும்பினார். இதனால், 'பிசி' என அழைக்கப்படும், முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் உதவியை நாடினார். சோனியாவுடன் ஆலோசனை நடத்திய சிதம்பரம், பின், ஸ்டாலினை சந்தித்து தி.மு.க., - - காங்., கூட்டணியை உறுதிபடுத்தினார். இது ராகுலுக்கு பிடிக்கவில்லை. இதனால், தமிழகத்தில் ஸ்டாலினுடன் இணைந்து பிரசாரம் செய்ய மறுத்து விட்டார்.

தேர்தல் முடிந்து, த.வெ.க., தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போது, இன்னொரு, 'பிசி' களம் இறங்கினார். அவர், காங்கிரசின் பிரவீன் சக்கரவர்த்தி. இவர், ராகுலுக்கு நெருக்கமானவர். 'விஜயுடன் கூட்டணி அமைக்க வேண்டும்' என, தலைமையை வற்புறுத்தி வந்தவர். தேர்தல் முடிவுகள் வந்தவுடனேயே, இவர் ராகுலுடன் பேசி, 'த.வெ.க.,விற்கு காங்கிரசின் ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அளிப்பர்' என, உடனடியாக முடிவெடுக்க வைத்தார். இதையடுத்து தி.மு.க., - - காங்., கூட்டணி உடைந்தது. விஜயுடன் நெருக்கமாக காணப்பட்டார் பிரவீன் சக்ரவர்த்தி.

த.வெ.க., ஆதரவுடன், ராஜ்யசபா எம்.பி.,யாக முயற்சிக்கிறார் எனவும் பேசப்படுகிறது. இனி, காங்,, மூத்த தலைவரான சிதம்பரத்தின் நிலை என்னவாகும் என, கட்சிக்குள் விவாதம் நடக்கிறது. தற்போது, ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ள சிதம்பரத்தின் பதவிக்காலம், 2028 ஜூனில் முடிவடைகிறது. இத்துடன் 'இவரின் அரசியல் வாழ்க்கையும் முடிவிற்கு வரும்' என்கின்றனர் விபரம் தெரிந்தவர்கள்.

மேற்கு வங்கத்தில் வன்முறை!

பொதுவாக, மேற்கு வங்கத்தில் தேர்தல் நடக்கும் போது ஏகப்பட்ட அடிதடிகள் நடக்கும். ஆனால், இந்த முறை தேர்தலின் போது எந்த வன்முறையும் நடக்கவில்லை. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி, திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி தன் சொந்த தொகுதியிலேயே தோற்ற பின், வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.

முதல்வர் சுவேந்து அதிகாரியின் செயலர் சுட்டுக் கொல்லப்பட்டார். சில இடங்களில், திரிணமுல் காங்., அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பா.ஜ., தொண்டர்கள் தாக்கப்பட்டனர்.

இதற்கெல்லாம் காரணம், 'திரிணமுல் காங்கிரசும், மம்தா பானர்ஜியும் தோல்வியை ஏற்க மறுப்பது தான்' என, சொல்லப்படுகிறது. 'முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்' என, அடம்பிடித்தார் மம்தா.

இதற்கிடையே, மத்திய உளவுத் துறையின் அறிக்கை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு அளிக்கப்பட்டு உள்ளதாம். அதில், 'திரிணமுல் காங்., தொண்டர்கள் நெற்றியில் திலகமிட்டு காவி உடை அணிந்து தாக்குதல் செய்துள்ளனர். பா.ஜ.,வினர் தான் வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்பதற்காக, மம்தா செய்த காரியம் இது' என, சொல்லப்பட்டு உள்ளதாம்.

இதுவரை, 200 முதல் தகவல் அறிக்கைகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்வரின் செயலர் கொல்லப்பட்டதை விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

'முதல்வராக பதவியேற்ற சுவேந்து அதிகாரியின் முதல் வேலையே, மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவது, மக்களிடையே உள்ள அச்சத்தை போக்குவது தான்' என, பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.

'மெஜாரிட்டி' இருந்தும் முதல்வர் பதவிக்கு அடிதடி!

இரண்டு பக்கத்து மாநிலங்களின் அரசியல், டில்லி அரசியல் வட்டாரங்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஒரு பக்கம், முதல்வர் தயாராக உள்ளார். ஆனால், ஆட்சி அமைப்பதில் சிக்கலும், கூடவே மெஜாரிட்டிக்காகவும் போராடி கொண்டிருக்கிறார்.

இன்னொரு பக்கம், பக்கத்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி உள்ளது. ஆனால், முதல்வர் யார் என்பதில் பெரும் போராட்டம் நடக்கிறது. இந்த இரண்டு மாநிலம் தமிழகமும், கேரளாவும் தான். மெஜாரிட்டிக்காக தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தயவிற்காக காத்திருக்கிறார் விஜய். ஆனால், கேரளாவிலோ முதல்வர் பதவிக்கு அடிதடி.

காங்கிரசோ, பா.ஜ.,வோ எதுவாக இருந்தாலும், மேலிடம் சொல்பவர் தான் முதல்வர். 'எம்.எல்.ஏ.,க்களின் கருத்தை கேட்டோம்' என, பேச்சுக்கு சொல்வரே தவிர, முடிவெடுப்பதோ கட்சிகளின் தலைமை தான்.

காங்., லோக்சபா எம்.பி., கே.சி.வேணுகோபால், கட்சியில் மிகவும், 'பவர்புல்' ஆனவர். ராகுலுக்கு மிகவும் நெருக்கம். இவர், முதல்வர் பதவி வேண்டும் என்கிறார். காங்., கூட்டணிக்கு, 102 தொகுதிகளில் வெற்றி. இதில் காங்., 63. இதில், 40 பேர் வேணுகோபாலின் ஆதரவாளர்கள்.

சட்டசபையில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் காங்கிரசின் வி.டி.சதீஷன். 'இவரால் தான் காங்., வெற்றி பெற முடிந்தது' என்கின்றனர், இவரது ஆதரவாளர்கள். மூன்றாவதாக இருப்பவர் ரமேஷ் சென்னிதலா. இவரும், முதல்வர் பட்டியலில் உள்ளார் என்றாலும், அதிக வாய்ப்பில்லை என, கூறப்படுகிறது.

ராகுல், தனக்கு நெருக்கமான வேணுகோபாலை தான் முதல்வராக நியமிப்பார் என, சொல்லப்படுகிறது. இதனால், சதீஷனின் ஆதரவாளர்கள், அவருக்கு ஆதரவாக போரட்டத்தில் ஈடுபடுகின்றனர். கடைசியில், வேணுகோபாலுக்கு தான் அதிக வாய்ப்பு என்கிறது டில்லி காங்., வட்டாரம்.

***

அடுத்து தெலுங்கானா!

வடகிழக்கு மாநிலமான அசாமில் ஆட்சியை தக்கவைத்தது பா.ஜ., மேற்கு வங்கத்தில் மம்தாவை தோற்கடித்து சரித்திரம் படைத்துள்ளது. மேற்கு வங்கத்தை அடுத்து, தெலுங்கானா மீது தன் கவனத்தை செலுத்த ஆரம்பித்து விட்டது பா.ஜ., 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா சட்டசபையில், பா.ஜ.,விற்கு எட்டு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். 2028 நவம்பரில் இங்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது.

இங்கு, முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி, காங்கிரசிடம் படுதோல்வி அடைந்தது. இப்போது, அந்த கட்சி மக்களிடையே பிரபலமாக இல்லை. போதாக்குறைக்கு, சந்திரசேகர ராவிற்கு எதிராக, அவரது மகள் கவிதா தனிக்கட்சி ஆரம்பித்து விட்டார்.

இந்நிலையில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்., ஆட்சியில் உள்ள ஊழல்கள், நிறைவேற்றாத வாக்குறுதிகள் என, பா.ஜ., களத்தில் இறங்கி உள்ளது. தற்போது, மத்திய உள்துறை இணை அமைச்சராக இருப்பவர், தெலுங்கானாவின் பண்டி சஞ்சய் குமார்.

தெலுங்கானா முன்னாள் பா.ஜ., தலைவராக இருந்த இவரை, மீண்டும் இங்கு தலைவராக்க பா.ஜ., தயாராகி வருகிறது. இவர், ஆர்.எஸ்.எஸ்., பின்புலத்தை சார்ந்தவர். வரும் வாரம் பிரதமர் மோடி தெலுங்கானாவின் ஹைதராபாதிற்கு வந்து, நெடுஞ்சாலைகள், ரயில்வே, ஜவுளி என, 9,000 கோடி ரூபாய்க்கும் மேலான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த இருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் களத்தில் இப்போதே இறங்கி, பா.ஜ.,விற்கு சாதகமாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. எப்படியாவது தென் மாநிலங்களில் ஒன்றிலாவது ஆட்சியில் இருக்க வேண்டும் என்பது, பா.ஜ.,வின் ஆசை.

நிறைவேறுமா?

***

தொடர்புக்கு: ndussh@dinamalar.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us