தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ டில்லி உஷ்...: ராகுல் சந்தேகம்!

டில்லி உஷ்...: ராகுல் சந்தேகம்!

டில்லி உஷ்...: ராகுல் சந்தேகம்!


UPDATED : ஜூன் 27, 2026 10:19 PM

ADDED : ஜூன் 27, 2026 10:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 27, 2026 10:19 PM ADDED : ஜூன் 27, 2026 10:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராஜஸ்தானில் உள்ள கோட்டா நகரம், மிகவும் புகழ்பெற்றது. காரணம் இங்கு, 2.5 லட்சம் மாணவர்கள், 'நீட், ஜெ.இ.இ.,' என, பல நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளில் படிக்கின்றனர். இனி, இளைய சமுதாயத்தை நம்பினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை உணர்ந்த காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், இங்கு ஒரு மாபெரும் போராட்டத்தை சமீபத்தில் நடத்தி, 'தற்போதுள்ள கல்வி திட்டம், இளைஞர்கள் மீது மன ரீதியான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இதை மாற்ற வேண்டும்' என, பேசினார். இந்நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றதற்கான பின்னணியில் ஒரு சுவாரசியம் உள்ளது.

டில்லியிலிருந்து கோட்டாவிற்கு செல்வதற்கு இரவு நேர ரயிலில் பயணிக்க விரும்பினார் ராகுல். அவருக்கு டிக்கெட், 'புக்' செய்யப்பட்டு விட்டது. மற்ற காங்., தலைவர்கள், பத்திரிகையாளர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. உடனே அவர்கள், மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டுவை அணுகி, தங்களுக்கு உதவும்படி கேட்டனர். 'எதற்காக கோட்டா செல்கிறீர்கள்?' என அவர் கேட்க, ராகுலின் நிகழ்ச்சி குறித்து கூறி, அவர் எந்த ரயிலில் செல்ல இருக்கிறார் என்ற தகவல்களையும் அமைச்சரிடம் தெரிவித்தனர். உடனே, அவர்களுக்கு டிக்கெட்களை புக் செய்து தர, அதிகாரிகளுக்கு ரவ்நீத் சிங் உத்தரவிட்டார். இந்த விஷயம் ராகுலுக்கு தெரிந்ததும், அவர் கோபப்பட்டு, தன் ரயில் டிக்கெட்டை, 'கேன்சல்' செய்ய சொன்னார்.

தான் ரயிலில் செல்வது, ரயில்வே அமைச்சருக்கு தெரிந்து விட்டது. ரயிலை அமைச்சர் வேண்டுமென்றே தாமதப்படுத்துவார். இதனால், கோட்டா செல்வதற்கு தனி விமானம் ஏற்பாடு செய்யும்படி சொல்லி விட்டார் ராகுல். இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டுவை, தேச துரோகி என வர்ணித்தவர் ராகுல். இதனால், அவர் ஏதாவது செய்து, தன் நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்து விடுவாரோ என, அஞ்சினாராம் ராகுல். கோட்டாவிற்கு தனி விமானம் வாயிலாக சென்ற ராகுல், ரயிலில் டில்லி திரும்பினார்.

மோடியை பின்பற்றும் விஜய்!

ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு துறையும், சம்பந்தப்பட்ட துறை செயல்பாடுகள் குறித்து, 'நோட்ஸ்' அனுப்பாமல், புகைப்பட, 'ஸ்லைடு'களாக இருக்க வேண்டும் என, அனைத்து துறைகளுக்கு தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். 'மோடி, 2014ல் முதன்முதலாக பிரதமர் பதவியில் அமர்ந்த போது என்ன செய்தாரோ, அதைத்தான் விஜய் இப்போது செய்துள்ளார்' என, டில்லி அதிகாரிகள் மத்தியில் பேசப்படுகிறது.

மத்திய அமைச்சக செயலர்கள், பிரதமர் தலைமையில் நடக்கும் ஆலோசனைக் கூட்டங்களுக்கு, ஏகப்பட்ட பைல்கள், பேப்பர்களுடன் வருவர். அரசின் பைல்களில் உள்ள இந்த குறிப்புகள், நேரடியாக விஷயத்திற்கு வராமல், 'வளவள' என எழுதப்பட்டிருக்கும்.

இந்த நடைமுறை மோடிக்கு பிடிக்கவில்லை. எனவே, அதிரடியாக முற்றிலும் மாற்றி அமைத்தார். 'எந்த விஷயத்தை அதிகாரிகள் கூறுவதாக இருந்தாலும், சுருக்கமாகவும், அதே சமயம், திட்டத்தின் சாதக, பாதகங்களை கணினியில், 'பவர் பாயின்ட்' வாயிலாக வரைந்து, முறையாக திரையில் போட்டு காண்பிக்க வேண்டும்' என, 2014ல் உத்தரவிட்டிருந்தார். இந்த முறை தான், மத்திய அரசில் இப்போதும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதையே தமிழக முதல்வர் விஜய் பின்பற்றுவது பாராட்டுக்குரியது. 'இது நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், அதிகாரிகள் என்ன சொல்ல வருகின்றனர் என்பதை தெளிவாக முதல்வருக்கு தெரியப்படுத்தும்' என்கின்றனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்.

***

கோபத்தில் மோடி!

பா.ஜ., வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது, அயோத்தி ராமர் கோவில் விவகாரம். ஆனால் தற்போது, அதே கோவிலின் நன்கொடை முறைகேடு விவகாரம், அக்கட்சியை பெரும் சிக்கலில் ஆழ்த்தி உள்ளது.

இந்த விவகாரம், பிரதமர் மோடிக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ., தலைவர்களோ அல்லது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரோ என, எந்த பெரிய தலைகள் இதில் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என, அவர் உத்தரவிட்டுள்ளதாக பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.

இதை விசாரிக்க மூன்று பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளார், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத். இதில், எட்டு பேரை சிறப்பு புலனாய்வு குழுவினர் சமீபத்தில் கைது செய்தனர். ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச்செயலர் சம்பத் ராய், அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தார்மிக அடிப்படையில் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

கைதான எட்டு பேரில் முக்கியமானவர், ராமசங்கர் என்கிற டின்னு யாதவ். இவர், அறக்கட்டளை பொதுச்செயலர் சம்பத் ராயின் டிரைவர். இவரிடம் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்திருந்தார் சம்பத் ராய். நன்கொடை பணம் இருந்த அனைத்து பெட்டிகளின் சாவிகளும் ராமசங்கரிடம் இருந்துள்ளன.

கோவிலுக்கு ஆட்களை வேலைக்கு எடுப்பதிலும், பணம் எண்ணும் பணியை ஒதுக்கீடு செய்வதிலும் ராமசங்கரே முக்கிய பங்கு வகித்துள்ளார். மேலும், இவருக்கு அயோத்தி மற்றும் லக்னோவில், 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துகளும், ஆடம்பர குடியிருப்பு மற்றும் பல விலையுயர்ந்த கார்களும் உள்ளன.

முதல் தகவலறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள மனிஷ் யாதவ், டின்னு யாதவின் மருமகன் ஆவார். டின்னு, தன் மருமகனை நன்கொடை எண்ணும் குழுவில் நியமித்திருந்தார்.

'திருட்டு குறித்த புகாரை சம்பத் ராய் கண்டுகொள்ளவில்லை. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அவரை விசாரிக்க வேண்டும்' என, ஆர்.எஸ்.எஸ்., தரப்பில் கூறுகின்றனர். அறக்கட்டளையின் இன்னொரு உறுப்பினரான, அனில் மிஸ்ரா நன்கொடை எண்ணும் பொறுப்பில் இருந்தார். இவருக்கு அயோத்தியில் ஒரு பெரிய குடியிருப்பு இருப்பதுடன், ஐந்து ஆண்டுகளில் இவரது சொத்து பல மடங்கு உயர்ந்துள்ளது. நன்கொடை முறைகேடு விவகாரம் ஆளும் பா.ஜ., அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

***

அமித் ஷா -- யோகி சண்டை முடிந்தது!

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உ.பி.,யில், அடுத்தாண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.- பா.ஜ., - காங்., - சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் என, அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் இறங்கிவிட்டன. 2024 லோக்சபா தேர்தலில், உ.பி.,யில் பா.ஜ., கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால், கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டியதாயிற்று.

எனவே, வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் பா.ஜ., உள்ளது. உ.பி.,யில் முதன்முதலாக யோகி ஆதித்யநாத் முதல்வராக காரணம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இவர் தான் விடாப்பிடியாக யோகிக்கு ஆதரவளித்தார். ஆனால், பின்னாளில் இவருக்கும், யோகிக்கும் இடையே உறவு கசந்தது. இது தொடர்ந்தால், சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறுவது கடினம் என்பதை இருவரும் உணர்ந்து, மீண்டும் நெருங்கி வந்துள்ளனர் என்கின்றனர் உ.பி., - பா.ஜ., தலைவர்கள்.

தேசிய தலைவராக நிதின் நபின் பதவியேற்ற பின், சமீபத்தில், உ.பி., - பா.ஜ., அமைப்பு மாற்றி அமைக்கப்பட்டது. யோகிக்கும், அமித் ஷாவிற்கும் நெருக்கமானவர்களுக்கு கட்சியில் முக்கிய பதவிகள் தரப்பட்டுள்ளன. வட மாநிலங்களில் தேர்தல் என்றாலே, அது ஜாதி சம்பந்தப்பட்டது தான். அதுவும் உ.பி.,யில் கேட்கவே வேண்டாம். புதிய நிர்வாகிகள் நியமனத்தில், அனைத்து ஜாதியினரையும் திருப்திப்படுத்தும் வகையில் தான், கட்சி தலைமை செயல்பட்டுள்ளது.

ஜாதி சமநிலையை பாதுகாப்பதற்காக, ராஜ்புத், ஷாக்யா, பிராமணர், பாசி உட்பட எட்டு சமூகத்தைச் சேர்ந்தவர்களை பொதுச்செயலர்களாக பா.ஜ., நியமித்துள்ளது. இதற்கிடையே, அயோத்தி நன்கொடை விவகாரம், பா.ஜ.,வின் வெற்றியை பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us