தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ டில்லி உஷ்: பிரதமர் சிக்கனம்!

டில்லி உஷ்: பிரதமர் சிக்கனம்!

டில்லி உஷ்: பிரதமர் சிக்கனம்!


UPDATED : மே 23, 2026 04:01 PM

ADDED : மே 23, 2026 03:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 23, 2026 04:01 PM ADDED : மே 23, 2026 03:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெளிநாடு பயணத்தை முடித்து, டில்லி வந்த உடனேயே மத்திய அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார், பிரதமர் மோடி. விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு சென்று, குளித்துவிட்டு உடனே அமைச்சரவை கூட்டத்திற்கு வந்து விட்டார். 'ஐந்து நாட்கள் பயணமாயிற்றே... ஓய்வெடுப்பார் என எதிர்பார்த்தால், உடனே அமைச்சரவை கூட்டமா' என வியந்தனர் மூத்த அதிகாரிகள்.

மாலை 5:00 மணிக்கு துவங்கிய கூட்டம், நான்கரை மணி நேரம் நடந்தது. மத்திய அமைச்சர்கள் என, அனைவரும் பங்கேற்றனர். ஈரான் போரால் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து பேசினார் பிரதமர். வழக்கமாக அமைச்சரவை கூட்டம் என்றால், பகோடா, சாண்ட்விட்ச், டீ, காபி, பிஸ்கட் என, பல சிற்றுண்டிகளை சாப்பிட தருவர். ஆனால், இந்த கூட்டத்தில் டீயை தவிர எதுவுமே தரவில்லையாம்.

சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டதால், இந்த ஏற்பாடாம். மத்திய அரசின் செயலர்களாக பணியாற்றுவோர் அனைவரும், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள். 'எதற்கு இவ்வளவு கஞ்சத்தனம்? டீ, பிஸ்கட் தருவதால் என்ன பெரிதாக சேமிக்கப் போகின்றனர்' என, சில அதிகாரிகள் பேசியதும், உடனே பிஸ்கட் தரப்பட்டதாம். கூட்டம் முடிய இரவு 9:30 மணியாகி விட்டது. இரவு சாப்பாடு கிடைக்கும் என, எதிர்பார்த்தனர். ஆனால், அதுவும் 'கட்.'

இந்த கூட்டத்தில், இன்னொரு விஷயத்தையும் பிரதமர் மோடி கூறினாராம். 'மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில், பெரும் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களுக்கும் உதவ வேண்டும்' என்றாராம்.

***

ஏன் மவுனம்?

சட்டசபை தேர்தலுக்கு முன், தமிழகத்திற்கு மத்திய அமைச்சர்கள் படையெடுத்து வந்தனர். பிரசாரத்தின் போது, பா.ஜ.,வின் மற்ற மாநில முதல்வர்களும் தமிழகத்தில் முகாமிட்டிருந்தனர். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி த.வெ.க., ஆட்சியை பிடித்த பின், பா.ஜ., தலைமை அமைதியாகி விட்டது. தமிழகத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்திய பா.ஜ., தலைமை மவுனமாக இருப்பது ஏன்?

'தி.மு.க., அரசு தோற்க வேண்டும் என, பா.ஜ., உழைத்தது. அது நடந்து விட்டது. இப்போதைக்கு, முதல்வர் விஜய் எப்படி ஆட்சியை நடத்துகிறார் என்பதை பொறுமையாக பார்க்க வேண்டும்' என்கின்றனர் பா.ஜ., தலைவர்கள்.

அ.தி.மு.க., உட்கட்சி பூசல் குறித்தும் எதுவும் சொல்லாமல் பா.ஜ., தலைமை அமைதியாக உள்ளது. கோவை மாவட்டம் தொண்டாமுத்துார் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., எஸ்.பி.வேலுமணிக்கு டில்லி பா.ஜ., தலைவர்களிடம் நல்ல பழக்கம் உண்டு. அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பல முறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தாராம். ஆனால், அவரது அழைப்புகளை ஏற்கவில்லையாம் அமித் ஷா.

இதையடுத்து, டில்லியில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் வேலுமணி. 'இன்னும் ஒரு மாதத்திற்கு எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம். மேற்கு வங்கம், அசாம் தேர்தலில் உழைத்து களைத்துள்ளோம். பின் பார்த்துக் கொள்ளலாம்' என, வேலுமணிக்கு தகவல் சொல்லப்பட்டதாம்.

அத்துடன், 'அ.தி.மு.க.,வில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பழனிசாமி சொல்வதை கேளுங்கள்' என்றும், பா.ஜ., தலைமை வேலுமணியிடம் தெரிவித்துள்ளதாம். தேர்தலில் தோல்வி அடைந்தாலும், அ.தி.மு.க., - பா.ம.க., இன்னும் தங்கள் கூட்டணியில் தொடர்வதால், பா.ஜ., மகிழ்ச்சியில் உள்ளதாம்.

***

கோபத்தில் பெட்ரோலிய அமைச்சர்!

ஈரான், அமெரிக்கா - இஸ்ரேல் போர் காரணமாக, உலகம் முழுதும் பெட்ரோலிய பொருட்களும் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக, இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு கொண்டு வரும் கப்பல்கள் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 'நாட்டின் பொதுத் துறை மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்' என, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதையேற்று, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரித்தன.

ஆனால், 'ரிலையன்ஸ்' உட்பட சில தனியார் எண்ணெய் நிறுவனங்கள், நம் நாட்டின் நிலையை புரிந்து கொள்ளாமல், தொடர்ந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தன. இதனால், பொதுத் துறை நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. இது, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு கோபத்தை ஏற்படுத்தியதாம்.

'இந்த தனியார் நிறுவனங்கள் ஏற்றுமதியை நிறுத்தி இருந்தால், இந்த அளவிற்கு பிரச்னை வந்திருக்காது' என, அவர் மறைமுகமாக கண்டனம் தெரிவித்தார். காரணம், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் பெயரை நேரடியாக குறிப்பிட்டால், பிரச்னை வரும் என்பதால் இப்படி சொன்னாராம்.

'நாட்டின் சமையல் எரிவாயு தேவை, ஒரு நாளைக்கு, 50 லட்சம் சிலிண்டர்கள். போர் காரணமாக, மக்களிடையே பீதி ஏற்பட்டதால், இந்த தேவை ஒரு நாளைக்கு, 75 லட்சமாகியது. இதை சமாளிப்பது எவ்வளவு கடினம்? இதனால் தான், பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தோம்' என்றும் அமைச்சர் ஹர்தீப் சிங் கூறினார். இப்போது, இந்த தனியார் நிறுவங்கள் ஏற்றுமதிக்கு அதிக கவனம் செலுத்தாமல், நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப செயல்பட்டு வருகின்றனவாம்.

***

அடுத்த பிரதமர் ராகுல்?

'வரும் 2029 லோக்சபா தேர்தலில், காங்., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ராகுல் பிரதமராவார்' எனக் கூறி இருக்கிறார், அரசியல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர். பீஹாரில் தனிக்கட்சி துவங்கி படுதோல்வி அடைந்தார் பிரசாந்த்.

தற்போது இவர், பீஹாரின் பாட்னாவிற்கு அருகே உள்ள, பீஹார் நவ்நிர்மான் ஆசிரமத்தில் தங்கி உள்ளார். அடுத்த சட்டசபை தேர்தல் வரை, இங்கு தான் வசிக்கப் போகிறாராம். ஆனால், இங்கிருந்தே அரசியல் ஆலோசனை அளித்து வருகிறார்.

'த.வெ.க.,வுடன் காங்., கூட்டணி அமைக்க வேண்டும். தி.மு.க.,விடமிருந்து விலக வேண்டும்' என, ராகுலுக்கு முதலில் கூறியவர், பிரசாந்த் கிஷோர். இவர், ராகுலுக்கு தன் தேர்தல் ஆலோசனை நிறுவனமான, 'ஐ- - பேக்' வாயிலாக வியூகங்களை வகுத்து வருகிறார்.

அடுத்த ஆண்டு பிப்ரவரியில், உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இங்கு, பா.ஜ.,வின் யோகி ஆதித்யநாத், தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக முதல்வராக உள்ளார். இவரை தோற்கடிக்க, காங்கிரசுக்கு ஆலோசனை அளித்துள்ளார் பிரசாந்த்.

'தி.மு.க.,வை முதுகில் குத்தியது போல, உ.பி.,யில், சமாஜ்வாதி கட்சியுடன் உள்ள உறவை காங்., முறித்து, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும். அப்படி செய்தால், காங்., ஆட்சி அமைக்கும். தொடர்ந்து, 2029 லோக்சபா தேர்தலிலும், காங்., ஆட்சியை பிடிக்கும்' என, ராகுலுக்கு ஆலோசனை அளித்து, அவரை குஷிப்படுத்தி உள்ளாராம் பிரசாந்த் கிஷோர். கடந்த லோக்சபா தேர்தலில், சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைத்து, உ.பி.,யில், 17 தொகுதிகளில் போட்டியிட்டு ஆறு தொகுதிகளில் வென்றது காங்கிரஸ்.

ராகுலுக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த அறிவுரை, மல்லிகார்ஜுன கார்கே உட்பட பல காங்., தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. 'பிரசாந்த் கிஷோரின் பேச்சை கேட்டு கூட்டணி அமைத்தால், நம் கதி அதோகதிதான். ஆனால், ராகுலுக்கு யார் புரியவைப்பது?' என, குழப்பத்தில் உள்ளனர் காங்., தலைவர்கள்.

கருத்துக்கள் சொல்ல: ndussh@dinamalar.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us