ADDED : ஆக 15, 2026 04:50 PM
அனுமதி கிடைத்ததா?
சமீபத்தில் தமிழகத்திலிருந்து எம்.பி.,யானவர் அவர்; ராகுலுக்கு நெருக்கமானவர் கூட. அடுத்த பிரதமர் ராகுல் தான் என, அடித்துச் சொல்லி வருகிறார். சமீபத்தில் இவர் செய்த ஒரு விஷயம், டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த தமிழக எம்.பி., சக காங்., -– எம்.பி.,க்கள் சிலரை, டில்லியிலுள்ள டென்மார்க் நாட்டு துாதரகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு டென்மார்க்கின் இந்திய துாதருடன் காலை உணவருந்தி உள்ளனர். அப்போது, ‘தமிழகத்தில் டென்மார்க் அரசு புதிய தொழில்களை தொடங்க வேண்டும்’ என, அவர்கள் பேசினராம்.
இந்த விவகாரம், பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ‘தமிழக முதல்வர் விஜய்க்கு நெருக்கமானவர் என்பதை தெரியப்படுத்த அந்த எம்.பி., இப்படி செயல்படுகிறாரா அல்லது அடுத்தது காங்., ஆட்சி தான் என்பதற்காக இப்படி செயல்படுகிறாரா’ என, கேள்விகள் எழுந்துள்ளன.
‘எந்தவொரு அமைச்சரோ அல்லது எம்.எல்.ஏ., – எம்.பி.,யோ வெளிநாட்டு துாதர்களை சந்திக்க வேண்டுமெனில், முதலில் வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும். எதற்காக இந்த சந்திப்பு; என்ன பேச போகின்றனர் என்பது குறித்து வெளியுறவுத் துறைக்கு தெரிவிக்க வேண்டும். அனுமதி கிடைத்த பின் தான் சந்திக்க வேண்டும். இப்படிப்பட்ட அனுமதி தமிழக எம்.பி.,க்களுக்கு கிடைத்ததா என்பதே சந்தேகம்’ என்கின்றனர்.
***
இரு அமைச்சர்களால் சிக்கல்?
தமிழக முதல்வர் விஜய்க்கு, இரு அமைச்சர்களால் சிக்கல் வரும் என, டில்லியில் பேசப்படுகிறது. இந்த இரு அமைச்சர்களும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு இப்போதே ஆரம்பித்து விட்டது; இன்னொருவரோ மத்திய அரசையும், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமைச்சர் அமித் ஷாவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த இருவரையும் மத்திய உளவுத் துறை கண்காணிப்பதாக சொல்லப்படுகிறது.
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அந்த அமைச்சரை பற்றி டில்லி அரசியல்வாதிகளுக்கு நன்றாக தெரியும். சமீபத்தில், தமிழக முதல்வர் விஜயை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர், ‘அந்த அமைச்சரிடம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்; அவர் ஊழல் பேர்வழி’ என, எச்சரித்தாராம்.
இன்னொரு தமிழக அமைச்சர் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே உள்ள சுமுகமான உறவை சீர்குலைக்கும் வகையில் பேசி வருகிறார். அத்துடன், ‘இவர் பேசுவது பிரிவினையை ஆதரிப்பதாக உள்ளது. இது, நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு நல்லதல்ல’ என, உளவுத்துறை அறிக்கை அனுப்பியுள்ளதாம்.
‘தமிழக அரசுக்கு நிதி விவகாரத்தில் உதவ மத்திய அரசு தயாராக உள்ளது’ என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் ஏற்கனவே உறுதி அளித்துள்ள நிலையில், இந்த தமிழக அமைச்சர் ஏன் இப்படி பேசுகிறார்’ என, டில்லி அரசியல் வட்டாரங்களில் வருத்தப்படுகின்றனர்.
***
திருமலையை பின்பற்றும் அயோத்தி
அயோத்தி ராமர் கோவிலில் நடந்த காணிக்கை திருட்டு, நாடு முழுதும் பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ராமர் கோவில் விவகாரங்களை, ராம ஜென்மபூமி தீர்த்த ஷே த்ரா அறக்கட்டளை கவனிக்கிறது. காணிக்கை திருட்டை அடுத்து, அறக்கட்டளை நிர்வாகிகள் இருவர் பதவி விலகிவிட்டனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் எப்படி ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்படுகிறாரோ, அதே போல அயோத்தி ராமர் கோவிலிலும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட வேண்டும் என, முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, இந்த தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன; 6,000 பேர் விண்ணப்பித்தனர். இதில், 16 பேர் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இதிலிருந்து மூவர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் ஐ.ஏ.எஸ்., இன்னொருவர் ஐ.பி.எஸ்., மூன்றாமவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இந்த அறக்கட்டளையில், 15 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் விரைவில் கூடி ஒருவரை தேர்ந்தெடுக்க உள்ளனர். அப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர் தான், ராமர் கோவிலின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்படுவார். இதில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிக்கே அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த காணிக்கை திருட்டு விவகாரம் குறித்து காங்., உட்பட எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் குரல் எழுப்பினாலும், அயோத்தியில் வாய் மூடி மவுனமாக உள்ளனர். காரணம், இந்த திருட்டில் பா.ஜ.,வுடன், சமாஜ்வாதி கட்சியும் சம்பந்தப்பட்டுள்ளது என, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டி வருகிறார். இன்னொரு பக்கம், அடுத்தாண்டு உ.பி.,யில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், அயோத்தியில் இது குறித்து எந்த ஒரு கட்சியும் விவாதிக்க தயாராக இல்லை.
***
பிரிவினையை ஏற்படுத்தும் பஞ்சாப் சட்டசபை தேர்தல்!
முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கும் பஞ்சாபில், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்திராவின் கொலை சதி வலையில் குற்றஞ்சாட்டப்பட்டு, துாக்கிலிடப்பட்டவர் கெஹர் சிங். இவரது மகன் சத்வந்த் சிங். இவர் தான் எங்கள் கட்சியின் பஸ்சி பதானா தொகுதி வேட்பாளர் என, அகாலிதளம் வாரிஸ் தே என்ற மாநில கட்சி அறிவித்துள்ளது. இது, பஞ்சாப் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
அகாலிதளம் வாரிஸ் தே என்ற இந்த கட்சி, காலிஸ்தான் பிரிவினை வாதத்தை ஆதரிக்கும் கட்சி. சீக்கிய மதத்திற்காகவும், பஞ்சாபின் உரிமைகளுக்காகவும், தியாகம் செய்ததாக கருதப்படும், குடும்பங்களின் வாரிசுகளுக்கு தேர்தலில் முன்னுரிமை அளிக்கிறது. இதன் தொடர்ச்சியாகவே, இந்திரா கொலை வழக்கில் துாக்கிலிடப்பட்ட கெஹர் சிங்கின் மகன் சத்வந்த் சிங்கிற்கு, பதேகர் சாஹிப்பின் பஸ்சி பதானா தொகுதியில் போட்டியிட, ‘சீட்’ வழங்கப்பட்டுள்ளது.
காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்கள் எப்படி இந்தியாவிற்குள் வந்தனர் என, உளவுத் துறை விசாரிக்கிறது. ஒரு காலத்தில், தீவிரவாதிகளின் பிடியில் இருந்த பஞ்சாப், இப்போது அமைதியாக உள்ளது. ஆனால், வரும் சட்டசபை தேர்தல் இந்த அமைதியை சீர்குலைத்து விடுமோ என்ற அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளது.
கருத்துக்கள் சொல்ல: ndussh@dinamalar.in
