தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/டில்லி உஷ் -

டில்லி உஷ் -

டில்லி உஷ் -


UPDATED : அக் 17, 2026 03:50 PM

ADDED : அக் 17, 2026 03:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 03:50 PM ADDED : அக் 17, 2026 03:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹிந்தியில் பேசிய முதல்வர்!

சென்னை மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கம், தேசிய நெடுஞ்சாலை, புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்கள் என, பல திட்டங்களை துவக்கி வைப்பதற்காக, பிரதமர் மோடி சமீபத்தில் சென்னை வந்தார். த.வெ.க., தலைவரும், முதல்வருமான விஜய் விமான நிலையம் சென்று, அவரை வரவேற்றதுடன், அவர் டில்லி திரும்பும் போதும் ஒரு மணி நேரம் காத்திருந்து அனுப்பி வைத்தார். விஜயின் இந்த உபசரிப்பு, பிரதமர் மோடியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.

பிரதமரின் பாதுகாப்பிற்காக, எஸ்.பி.ஜி., எனப்படும், சிறப்பு பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகள் சென்னை வந்தனர். இவர்களில் சிலர், முதல்வர் விஜயுடன் பேசினர். ஒருசிலர், ‘செல்பி’யும் எடுத்தனர். முதல்வர் விஜயும், அந்த அதிகாரிகள் ஒவ்வொருவரின் பெயரையும், அவர்களின் ஊரையும் கேட்டு தெரிந்து கொண்டாராம். முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர், ‘விஜயின் ஆங்கில உச்சரிப்பு நன்றாக உள்ளது’ என, சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

‘தமிழக முதல்வர் விஜய் நன்றாக ஆங்கிலம் பேசுகிறார். அத்துடன், ஹிந்தியில் பேசினால் புரிந்து கொள்கிறார்; ஓரளவிற்கு ஹிந்தியில் பதிலும் சொன்னார்’ என்கின்றனர், பிரதமருடன் சென்னை வந்த அதிகாரிகள். ‘ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார்’ என, சமூக வலைதளத்தில் குறிப்பிட்ட அந்த முன்னாள் மத்திய அமைச்சர், ‘ஹிந்தியில் விஜய் சுமாராக பேசியதை ஏன் குறிப்பிடவில்லை?’ என, பிரதமரின் பாதுகாப்பிற்காக வந்த அதிகாரிகள் ஆச்சரியப்படுகின்றனர்.

காணாமல் போன கைக்கடிகாரம்!

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, கரப்பான்பூச்சி கட்சியும், ‘இண்டி’ கூட்டணியும், டில்லியில் தனித்தனியாக போராட்டங்களை நடத்தி வருகின்றன. காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தலைமையில், ‘இண்டி’ கூட்டணியினர் டில்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்திற்கு ஊர்வலமாக சென்றனர். இதில், காங்., மூத்த தலைவரும், கர்நாடக முதல்வருமான சிவகுமாரும் பங்கேற்றார். ஏகப்பட்ட கூட்டம்.

சிவகுமார், ராகுல் அருகே வந்து நிற்க முயற்சித்தார். ஆனால், அவரை ராகுல் ஒரு தள்ளு தள்ளிவிட்டார். நிலைகுலைந்து போன சிவகுமாருக்கு அதிர்ச்சி. அவர் கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தை காணவில்லை. 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அந்த கைக்கடிகாரத்தை இவருக்கு பரிசாக அளித்தது, முன்னாள் முதல்வர் சித்தராமையா.

ராகுல் தள்ளியதால் கீழே விழுந்ததா அல்லது யாராவது ஆட்டையை போட்டனரா என, தெரியவில்லை. மேலும், அங்கிருந்த கூட்ட நெரிசலில் கீழே குனிந்து, சிவகுமாரால் தேடவும் முடியவில்லை. ஞானேஷ் குமார் பதவி விலகுகிறாரோ இல்லையோ... கைக்கடிகாரம் தொலைந்து போனதால் வருத்தத்தில் உள்ளாராம் சிவகுமார்.

ராகுல் செயலால் வருத்தம்!

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டங்கள், டில்லியில் வலுத்து வருகின்றன. கரப்பான் கட்சியினர் எங்கே தங்களை முந்தி விடுவரோ என்ற பயத்தில், காங்கிரசும் போராட்டங்களில் இறங்கியுள்ளது. போராட்டத்தில், திடீரென பெண் ஒருவரை முன்னிறுத்தி அவரை பேச வைத்தார் ராகுல்.

அவர் பெயர் நேஹா போரா, 29. இவர், இடதுசாரி மாணவர் அமைப்பான, அகில இந்திய மாணவர் சங்கத்தின் தேசிய தலைவர். இது, காங்கிரசின் மூத்த தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘இளைஞர்களை முன்னிறுத்தி பேச வைக்க வேண்டும் என்றால், நம் கட்சியில் எத்தனையோ பேர் உள்ளனர்... அவர்களை விடுத்து, நக்சல் குணம் கொண்ட இந்த பெண்ணை ஏன் பேச வைத்தார் ராகுல்... இவர் நம்ம கட்சியில் கூட இல்லையே’ என, நொந்து போய் சொல்கின்றனர்.

இதற்கு ஒரு சம்பவத்தையும் சுட்டிக்காட்டுகின்றனர். நேஹா போராவை போலவே இடதுசாரி போராளியாக இருந்தவர், பீஹாரைச் சேர்ந்த கண்ணையா குமார். இவரின் போராட்ட குணத்தை பார்த்து, 2021ல் காங்கிரசில் இணைய வைத்தார் ராகுல். 2024 லோக்சபா தேர்தலில், வடகிழக்கு டில்லி தொகுதியில் காங்., வேட்பாளராக களமிறங்கினார். இவருக்கு, ‘சீட்’ கொடுக்கக் கூடாது என, டில்லி காங்., தலைவர் வற்புறுத்தியும் ராகுல் கேட்கவே இல்லை. விளைவு,- பா.ஜ., வேட்பாளரிடம், 1.30 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். யாருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது கூட தெரியாமல் ராகுல் உள்ளாரே என, வருத்தப்படுகின்றனர் மூத்த தலைவர்கள்.

கண்டுகொள்ளாத கரப்பான் கட்சி!

டில்லியின் மையப் பகுதிகளில் காங்., மற்றும் கரப்பான் கட்சியினர் போராட்டங்கள் நடத்துவதால், மக்கள் ஒருபுறம் பாதிக்கப்பட்டாலும், அதிகம் பாதிக்கப்படுவது வியாபாரிகள். விஜயதசமி, சரஸ்வதி பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளால், டில்லியில் வியாபாரம் ஏகப்பட்டதுக்கும் நடக்கும். புடவை மற்றும் நகைக் கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், இந்த போராட்டங்களால் டில்லியின் முக்கிய மார்க்கெட்டான, ‘கன்னாட் பிளேஸ்’ கடைகளை மூடும்படி போலீசார் உத்தரவிடுகின்றனர். இதனால், ஒரு நாளுக்கு, 250 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகர்களுக்கு இழப்பு என, சொல்லப்படுகிறது. ஏற்கனவே, ஆன்லைன் வாயிலாக வியாபாரிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த போராட்டங்கள் அவர்களை பெரிதும் பாதித்துள்ளன.

‘இந்த பண்டிகை காலத்தில் தான் எங்களுக்கு வருமானம் உண்டு. தவிர, பல சிறு வியாபாரிகள் நடைபாதைகளில் கடை வைத்து பிழைப்பர். உங்கள் போராட்டத்தை, இந்த பண்டிகை காலங்களில் நடத்தாமல் இருந்தால், எங்களின் வாழ்வாதாரம் மேம்படும்’ என, ராகுலிடம் வியாபாரிகள் சிலர் கோரிக்கை வைத்தனர்.

இதை ஏற்ற ராகுல், போராட்டங்களை தள்ளி வைத்தார். ஆனால், கரப்பான் கட்சியினர் வியாபாரிகளின் வேண்டுகோளை கண்டுகொள்ளாமல், கன்னாட் பிளேசில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமும் தற்போதைக்கு தலையிட மறுத்து விட்டது.

கருத்துக்கள் சொல்ல: ndussh@dinamalar.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us