UPDATED : நவ 21, 2026 03:58 PM
ADDED : நவ 21, 2026 03:58 PM
ராமரை அடுத்து கிருஷ்ணர்!
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மொத்தம், 403 சட்டசபை தொகுதிகளுடைய இங்கு அடுத்தாண்டு பிப்ரவரி-யில் தேர்தல் நடக்கிறது. அங்கு தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், தற்போதே தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கி விட்டார்.
உ.பி., தேர்தல் என்றாலே ஜாதி, மதம் போன்றவை தான் முக்கிய பங்கு பெறும். பிற்பட்டவர்கள், பட்டியின மக்கள் என, அனைத்து தரப்பு வாக்காளர்களையும் கட்சிகள் தன் பக்கம் இழுக்க முயற்சிகளை மேற்கொள்ளும்.
சமாஜ்வாதியை யாதவர்களின் கட்சி என, மற்ற கட்சிகள் குற்றம் சாட்டும். எனவே, இந்த முறை மற்ற ஜாதியினரையும் தன் பக்கம் கொண்டு வரவே அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு செல்கிறார் அகிலேஷ்.
இது, பா.ஜ.,வில் குழப்பத்தை ஏற்படுத்தினாலும், ‘உங்களுடன் ராகுலும் வருகிறாரா’ என, கேள்வி கேட்க தொடங்கி விட்டனர் பா.ஜ.,வினர். அதோடு, ‘ராதே ராதே கமல் கிலாதே’ புதிய கோஷத்தையும் எழுப்ப ஆரம்பித்து விட்டனர். தாமரை பூவை பூக்க வையுங்கள் என்பது தான் இதன் அர்த்தம். வட மாநிலங்களில் குறிப்பாக, கிருஷ்ணர் பிறந்த இடமான மதுராவில், ஒருவரை ஒருவர் சந்தித்தால், ‘நமஸ்தே’ என்பதற்கு பதிலாக, ‘ராதே ராதே’ என்று தான் சொல்வர்.
கிருஷ்ணர் பிறந்த இடத்திற்கு பக்கத்திலேயே சஹி ஈத்கா என்ற மசூதி உள்ளது. இந்த இடம் கிருஷ்ணர் கோவிலுக்கு சொந்தமானது என, ஏற்கனவே பிரச்னை உள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. இந்த சூழலில், உ.பி., சட்டசபை தேர்தலில், இதை ஒரு முக்கிய பிரச்னையாக்க பா.ஜ., முடிவெடுத்து களத்தில் இறங்கியுள்ளது. சென்ற தேர்தலில் ராமர், இந்த முறை கிருஷ்ணர்!
விஜய்க்கு நன்றி
காங்., – பார்லி., குழு தலைவர் சோனியாவின் சுயசரிதை புத்தகம் இதுவரை, 2 லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது என்றாலும், பல பிரச்னைகளையும் சந்தித்து வருகிறது. டில்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில், முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் சமீபத்தில் சிகிச்சை பெற்றார். அவரை சந்திக்க காங்., மூத்த தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் சென்றார். அப்போது, தன்கர் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். அது, சோனியாவின் சுயசரிதை. இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
துணை ஜனாதிபதி பதவியை திடீரென ராஜினாமா செய்த போது, அதற்கான காரணத்தை தன்கர் தெரிவிக்கவில்லை. காங்கிரசுக்கு சாதகமாக செயல்பட்டதால், அவரை ராஜினாமா செய்யும்படி பா.ஜ., சொல்லியதாக அப்போது பேசப்பட்டது. அது, இப்போது உண்மையாகி விட்டது என்கின்றனர் பா.ஜ.,வினர்.
இன்னொரு பக்கம், புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்த த.வெ.க., தலைவரும், தமிழக முதல்வருமான விஜய்க்கு சோனியா, ராகுல், பிரியங்கா ஏகப்பட்ட மரியாதை அளித்து மற்ற காங்கிரசாரை ஓரங்கட்டி விட்டனர் என, கட்சிக்குள் பேசப்படுகிறது.
இதற்கிடையே, இன்னொரு விஷயமும் அலசப்படுகிறது. முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து சோனியா கடிதம் எழுதிய விவகாரம் தான் அது. இந்த கடிதத்தில் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் கையெழுத்திட்டு உள்ளனராம்.
காங்., முதல்வர்களுக்கு
பிரதமர் அட்வைஸ்
காங்., ஆளும் கர்நாடக முதல்வர் சிவகுமார், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் சதீசன் ஆகியோர், டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து தங்கள் மாநிலங்களுக்கான வளர்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என, சமீபத்தில் கேட்டுக்கொண்டனர். இவர்களிடம் தனித்தனியாக, ஐந்து நிமிடங்கள் பேசினாராம் பிரதமர்.
‘காங்., ஒரு பிரதான எதிர்க்கட்சி. ஆனால், உங்கள் தலைவர் ராகுலின் செயல்பாடுகள் சரியில்லை. கட்சியில் பல சீனியர்கள் உள்ளனர். அவர்களாவது ராகுலுக்கு ஆலோசனை சொல்லலாமே. நீங்களாவது எடுத்துச் சொல்லக்கூடாதா’ எனக் கேட்டதோடு, ‘கட்சிக்குள் நகர்ப்புற நக்சல்கள் வந்துவிட்டனர். அவர்களால் தான் காங்கிரசுக்கு இந்த நிலைமை’ என்றாராம் மோடி.
ரேவந்த் ரெட்டி எதுவும் பேசாமல் அமைதியாக கேட்டுக்கொண்டாராம். சதீசன் ஒரு புன்னகையுடன் நிறுத்திக் கொண்டாராம். ஆனால், கர்நாடக முதல்வர் சிவகுமாரோ மனம் திறந்து பேசினாராம். ‘கட்சியின் சீனியர்களை ராகுல் இப்போது கண்டுகொள்வதில்லை. இளைஞர்கள் தான் எதிர்காலம் என்கிறார். அது சரி, அதேசமயம் அனுபவம் வாய்ந்த சீனியர்களின் அறிவுரைகளையும் கேட்க வேண்டும். நாங்கள் என்ன சொல்வது’ என அலுத்துக் கொண்டாராம் சிவகுமார்.
உத்தரவை மதிக்காத ராகுல்
எப்போது வேண்டுமானாலும் பார்லி., கூட்டத்தொடர் கூட்டப்படலாம். அதில், தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது என, டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதற்கேற்றார் போல கடந்த மழைக்கால கூட்டத்தொடர் இதுவரை முடித்து வைக்கப்படவில்லை.
வழக்கமாக, ஒரு கூட்டத்தொடர் முடித்து வைக்கப்படாமல் இருந்தால், விரைவில் பார்லி., மீண்டும் கூடும் என்பது அர்த்தம். இதனால், ‘காங்., – எம்.பி.,க்கள் யாரும் டிச., முதல் வாரம் வரை வெளிநாடு செல்லக்கூடாது’ என, காங்., மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், உத்தரவு வந்த அன்றே அமெரிக்கா சென்று விட்டார் காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல். மற்றொரு எம்.பி.,யான சசி தரூர், துபாய் சென்றார்.
‘மேலிட உத்தரவு மற்றவர்களுக்குத் தான். தலைவர்களுக்கு கிடையாது’ என, கிண்டலடிக்கின்றனர் காங்கிரசார். தரூர் பா.ஜ., அரசுக்கு ஆதரவாக பேசி வருவதால், அவர் காங்கிரஸ்காரரா என்பதே சந்தேகம் என்பதால், அவரை லிஸ்டில் சேர்க்கவில்லையாம்.
எப்போது தான் திருந்துவார்?
காங்., சார்பில் பாரத் உச்சி மாநாடு தெலுங்கானாவின் தலைநகர் ஹைதராபாதில் சமீபத்தில் நடந்தது. இதில், ஐரோப்பிய நாடான இத்தாலியின் அரசியல்வாதியும், ஐரோப்பிய சோசலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலரான ஜியாகோமோ பிலிபெக் பங்கேற்றார். மேடையில் பேசிய அவர், மோடியை ஓட்டு திருடன் என, விமர்சித்ததுடன், பதவி விலகும்படி முழக்கமிட்டார். இதனால் பலரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் ராகுல், இந்த பேச்சை சிரித்து ரசித்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி விட்டது. இது, கட்சிக்குள்ளும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
இந்த விஷயத்தை பா.ஜ.,வினர் பெரிதுபடுத்த துவங்கி, நாட்டிற்கு எதிரானவர் ராகுல் என, பிரசாரம் செய்ய தொடங்கி விட்டனர். உ.பி., சட்டசபை தேர்தலில் இந்த விவகாரத்தை முன்னிறுத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இது காங்கிரசுக்கு பின்னடவை ஏற்படுத்தும் என, பேச்சு அடிபடுகிறது.
போதாக்குறைக்கு அமெரிக்கா சென்ற ராகுல், வழக்கம்போல, ‘நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது’ என பேசியுள்ளார். ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட பலரும் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாராட்டி வருகின்றனர். எப்போது தான் திருந்துவார் ராகுல் என, சீனியர் தலைவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
