ADDED : மே 11, 2025 02:29 AM

ஒரு மணி நேரம்தான் துாக்கம்!
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின், பிரதமர் பிஸியாகி விட்டார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் கூடாரங்களை இந்திய ராணுவம் நொறுக்கி தள்ளியது. இதில், 100க்கும் மேற்பட்ட பாக்., பயங்கரவாதிகள் பலியாகி விட்டனர்.
இதையடுத்து, தொடர்ந்து பல ஆலோசனை கூட்டங்கள், முப்படை தளபதிகளுடன் கூட்டம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராணுவ அமைச்சர், உள்துறை அமைச்சர் என பல கூட்டங்களில் பங்கேற்று, பாகிஸ்தான் தாக்குதலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விவாதித்தார் மோடி.
மற்றொரு பக்கம் வெளிநாட்டு தலைவர்களுடன் தினமும் பேசி வருகிறார். இதுவரை, 150க்கும் மேலான உலக தலைவர்களுடன் பேசி விட்டாராம் மோடி. 'பாக்., பயங்கரவாதிகளைத்தான் இந்தியா தாக்கியது' என, உலக தலைவர்களுக்கு தெரிவித்து உள்ளார்.
ஒருபக்கம் ஆலோசனைக் கூட்டங்கள், இன்னொரு பக்கம் உலக தலைவர்களுடன் போனில் பேச்சு என, நாள் முழுதும் பிரதமர் பிஸியாகவே இருந்தார்.
'இந்த காலகட்டத்தில், அவர் அதிகம் துாங்கவே இல்லையாம். அதிகபட்சமாக இரண்டு மணி நேரம்தான் மோடி துாங்கியிருப்பார்' என்கின்றனர், பிரதமருக்கு நெருக்கமானவர்கள். சாப்பாடும் அதிகம் கிடையாதாம்.
மோடி இருக்கும் இடமருகே, ஒரு ப்ளாஸ்க்கில் வெந்நீர் வைத்துவிட்டால் போதும்... அதைக் குடித்தபடியே கூட்டங்களில் பங்கேற்பாராம்.
அதிக பிரச்னை, நெருக்கடி என வரும்போது, குஜராத்தில் உள்ள அம்பாதேவி அம்மனை வழிபடுவதுடன், பிரார்த்தனையும் செய்து கொண்டிருப்பாராம். அதிகம் யாருடனுமே பேச மாட்டார். தனக்கு நெருக்கமாக, பல ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருக்கும் இரண்டு மூத்த அதிகாரிகளுடன் மனம் விட்டு பேசுவாராம் மோடி.
யாருக்குமே தெரியாது!
காஷ்மீரில் சுற்றுலா பயணியரின் படுகொலைகளுக்கு பின், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை அழிக்க முடிவெடுத்தார் மோடி. இதற்கு, 'ஆப்பரேஷன் சிந்துார்' எனவும் பெயரிட்டார். ஆனால், இந்த ஆப்பரேஷன் மிகவும் ரகசியமாக இருந்ததாம்; சக அமைச்சர்களுக்கு கூட இதுகுறித்து பிரதமர் சொல்லவே இல்லையாம்.
யார் யாருக்கு இந்த விஷயம் தெரியும் என்றால், பாதுகாப்பு குறித்த அமைச்சரவைக் குழுவில் பிரதமர், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உள்ளனர்.
இவர்களில் அமித் ஷா, ஜெய்சங்கர் மற்றும் நிர்மலா சீதாராமனுக்கு மட்டும் இந்த ஆப்பரேஷன் குறித்து தெரியும்; ஆனால், அதுவும் என்ன செய்ய போகின்றனர் என்பது குறித்து இந்த அமைச்சர்களுக்கு முழுமையாக தெரியாதாம்.
அதேநேரம், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும், முப்படை தளபதிகளுக்கு மட்டுமே முழு விபரங்கள் தெரியுமாம்; அவ்வளவு ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாம், ஆப்பரேஷன் சிந்துார்.
ஊடகங்கள் மீது நடவடிக்கை
எந்த ஒரு நாடும், மற்ற நாடுகளுடன் போருக்கு சென்றால், அந்தந்த நாடுகளின் பத்திரிகைகளும், அரசியல் தலைவர்களும், அரசை ஆதரிப்பதுதான் வழக்கம்.
ஆனால், இந்தியாவில் உள்ள ஒரு சில பத்திரிகைகள், நம் நாட்டிற்கு எதிராக செயல்பட்டு வருவதாக, உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, 80,000 எக்ஸ் கணக்குகள் மற்றும் ஒரு இணையதளம் ஆகியவற்றை மத்திய அரசு முடக்கி உள்ளது.
சமூக வலைதளங்களில் இந்தியாவிற்கு எதிராக நம் நாட்டினர் சிலர் பிரசாரம் செய்து வருகின்றனர். 'இதை உள்துறை அமைச்சகம் மிகவும் கூர்ந்து கண்காணித்து வருகிறது. விரைவில், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்; அதுவும், மிகவும் கடுமையான நடவடிக்கையாக இருக்கும். ஒரு பத்திரிகை நடக்காத ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாம்; பின் அதை நீக்கிவிட்டது' என்கின்றனர், உள்துறை அதிகாரிகள் வட்டாரம்.
ஒடிஷா அரசியலை இயக்குவது யார்?
ஒடிஷாவில் தற்போது பா.ஜ., ஆட்சி நடக்கிறது; மோகன் சரண் மஜி முதல்வராக உள்ளார். ஒடிஷாவைச் சேர்ந்த இருவர் மத்திய அமைச்சரவையில் உள்ளனர். ஒருவர் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்; இவர் ஒடிஷாவைச் சார்ந்தவர்.
இன்னொருவர், ரயில்வே, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். இவர் ராஜஸ்தானில் பிறந்தவர்; ஆனால், ஒடிஷா கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. இதனால், ஒடிஷாவில் அதிக கவனம் செலுத்துகிறார்.
'ஒடிஷாவை கட்டுப்படுத்துவது யார்... தர்மேந்திர பிரதானா, அஸ்வினியா?' என, பா.ஜ., வட்டாரங்களில் ஒரு விவாதமே நடைபெற்று வருகிறது.
பல ஆண்டுகளாக முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் கட்சியை தோற்கடித்து பா.ஜ., ஆட்சிக்கு வந்தபோது, தர்மேந்திர பிரதான் தான் முதல்வராவார் என, பா.ஜ.,வில் எதிர்பார்த்தனர்; ஆனால், மோகன் சரண் மஜியை முதல்வராக்கினார் மோடி.
இதனால், மனம் உடைந்த தர்மேந்திர பிரதான், ஒடிஷா பா.ஜ.,வை தன் பக்கம் வைத்திருந்தார். ஆனால், இப்போது இவருடைய கையும் ஒடுங்கிவிட்டது. 'அஸ்வினி வைஷ்ணவின் கை தான் ஓங்கியுள்ளது; அவர்தான் ஒடிஷா அரசியலை இயக்கிக் கொண்டிருக்கிறார்' என்கின்றனர், பா.ஜ.,வினர்.
அத்துடன் பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவிற்கும் நெருக்கமானவர் வைஷ்ணவ். அதனால்தான், இவருக்கு இரண்டு முக்கிய துறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
நவீன் பட்நாயக்கின் வலது கையாக செயல்பட்ட வி.கே.பாண்டியனுக்கும் நெருக்கமானவர் அஸ்வினி. இதனால் தான், பிப்ரவரி மாதம் நடந்த ராஜ்யசபா எம்.பி., தேர்தலில், பாண்டியன் உதவி வாயிலாக வெற்றி பெற்றார்.
இப்படி பிரதானும், அஸ்வினியும் ஒடிஷாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, முதல்வர் மோகன் சரண் மஜியோ கவலையில் உள்ளார்.