ADDED : பிப் 04, 2024 12:28 AM

கோல்கட்டா: 'இண்டியா' கூட்டணியிலிருந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விலகி விட்டார். காங்கிரசுக்கு தன் மாநிலத்தில், இரண்டு தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என சொல்லி விட்டதால் இந்த பிரச்னை.
இதோடு மம்தா நிற்கவில்லை. காங்கிரசை, குறிப்பாக ராகுலை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ராகுலின் பாதயாத்திரை மேற்கு வங்கத்தில் நடைபெற்ற போது, அவருடைய கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது; இதைப் பெரிதுபடுத்தி மம்தாவை காங்கிரஸ் விமர்சிக்காமல் அமைதி காத்தது.
'ராகுலின் கார் வேகமாக சென்ற போது, திடீரென ஒரு பெண் ராகுலைச் சந்திக்க, தெருவின் நடுவே வந்து விட்டார்; டிரைவர், பிரேக் போட்டார். இதனால், செக்யூரிடிக்காக கட்டப்பட்டிருந்த கயிறு கண்ணாடியில் பட்டதால் காரின் கண்ணாடி நொறுங்கிவிட்டது. ராகுலைச் சந்திக்க ஏராளமான மக்கள் காத்திருந்தனர்' என, சமூக வலைதளத்தில் காங்கிரஸ் பதிவிட்டது.
இப்படி மம்தாவை விமர்சிக்காமல், காங்கிரஸ் தாஜா செய்து வந்தாலும், மம்தாவோ சும்மா இருக்கவில்லை. 'லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே அதிகம்' என, கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதோடு நிற்கவில்லை... 'யாத்திரை வாயிலாக மேற்கு வங்க முஸ்லிம் வாக்காளர்களிடையே, குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் ராகுல்' என, மேலும் ஒரு கோபக் கனையை வீசினார் மம்தா. இருப்பினும், மம்தாவை விமர்சிக்காமல் மீண்டும் இண்டியா கூட்டணிக்கு அவர் வருவார் என, ராகுல் எதிர்பார்க்கிறார். அதனால் காங்கிரஸ் தலைவர்களும், மம்தாவிற்கு எதிராக பேசாமல் அமைதியாக உள்ளனர்.