UPDATED : ஏப் 13, 2025 08:45 AM
ADDED : ஏப் 13, 2025 08:05 AM

ஆமதாபாத்: சமீபத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் குஜராத் மாநிலம் ஆமதாபாதில் நடந்தது. இதில் யார் பங்கேற்றனர் என்பதை விட, யார் பங்கேற்கவில்லை என்பதுதான் பரபரப்பு செய்தியானது. கட்சியின் தேசிய செயலர் பிரியங்கா இதில் பங்கேற்கவில்லை. லோக்சபாவில் நடந்த வக்ப் மசோதா தொடர்பான விவாதத்திலும் பிரியங்கா பங்கேற்கவில்லை.
கேரளாவிலிருந்து எம்.பி., யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரியங்கா, வக்ப் விவாதத்தில் ஏன் பேசவில்லை என, காங்கிரசின் கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக் கேள்வி எழுப்பியது.
உறவினருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் வெளிநாடு சென்றுவிட்டார் பிரியங்கா, என காங்., தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அதை மற்றவர்கள் ஏற்கவில்லை.
இன்னொரு பக்கம் கர்நாடக அமைச்சர் பரமேஸ்வரரும், ஆமதாபாத் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பட்டியலினத்தைச் சேர்ந்த பரமேஸ்வர், பட்டியலினத்தைச் சேர்ந்த தன்னை கர்நாடகாவின் முதல்வராக்க வேண்டும் என காங்., மேலிடத்திடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். ஆனால் ராகுலோ, இதை ஏற்க மறுத்து விட்டார். இதனால், கர்நாடக காங்கிரசில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

