ADDED : மே 25, 2025 01:22 AM

புதுடில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது இந்திய ராணுவம். 'இந்த ஆப்பரேஷன் சிந்துார் தொடர்பாக, பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்' என, தொடர்ந்து பிரதமரை வலியுறுத்தி வருகிறார் ராகுல்; ஆனால், மற்ற எதிர்க்கட்சிகள் இதை கண்டுகொள்ளவில்லை.
ஆனால், வேறொரு வேலை செய்தார் மோடி. அனைத்து கட்சி எம்.பி.,க்களின் குழுக்கள் பல நாடுகளுக்கு சென்று, 'பாகிஸ்தான் எப்படி பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறது, எதற்காக ஆப்பரேஷன் சிந்துார் நடத்தப்பட்டது' என, இந்த எம்.பி.,க்கள் வெளிநாட்டு பிரமுகர்களை சந்தித்து, விளக்கம் அளித்து வருகின்றனர்.
'இப்படி எம்.பி.,க்களை வெளிநாட்டிற்கு அனுப்பி, நம் பக்கம் என்ன நடந்தது என்பதைச் சொல்ல வேண்டும் என, பிரதமருக்கு ஐடியா கொடுத்தது, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர்' என, சொல்லப்படுகிறது. யார் யார் குழுவில் இடம் பெற வேண்டும் என்பதை, பிரதமர் மோடி தான் தேர்ந்தெடுத்தாராம்.
இந்த எம்.பி.,க்கள் குழு இந்தியா திரும்பியதும், அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது; இவர்கள் அனைவரையும் அழைத்து, நன்றி சொல்ல இருக்கிறாராம் மோடி.