மொபைல் போனில் பேசக்கூடாது; அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு: டில்லி உஷ்ஷ்...!
மொபைல் போனில் பேசக்கூடாது; அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு: டில்லி உஷ்ஷ்...!
UPDATED : மே 04, 2025 08:11 AM
ADDED : மே 04, 2025 01:37 AM

புதுடில்லி: பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பின் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஒரு உத்தரவு போட்டுள்ளாராம் பிரதமர் மோடி. அது, 'அமைச்சர்கள் அனைவரும் அரசு தொடர்பான எந்த விஷயத்தையும் பொது வெளியில் விவாதிக்க வேண்டாம். அதைவிட முக்கியமானது, மொபைல் போனில் அரசு விபரங்கள் குறித்து யாரும் பேசவே கூடாது.
'பாதுகாப்பு தொடர்பான விபரங்களை சக அமைச்சர்களிடம் மொபைலில் பேசும்போது வாய்தவறி பேசிவிடுவீர்கள்; இதனால், விஷயம், 'லீக்' ஆகிவிடும். எனவே, மொபைல் போனில் அதிகம் பேச வேண்டாம்' என, பிரதமர் மோடி அதிரடியாக உத்தரவிட்டுள்ளாராம்.
'ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்' என, மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் முடிவெடுத்தது. இது தொடர்பான எந்த செய்தியும், முன்பாகவே வெளியாகவில்லை; பத்திரிகையாளர்களுக்கும், ஏன்... கட்சிக்காரர்களுக்கு கூட இப்படி ஒரு முடிவை மோடி எடுப்பார் என தெரியவில்லை. இதற்கு காரணம், 'மோடியின் அதிரடி உத்தரவுதான்' என்கின்றனர்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, 'ஒரு அமைச்சர், இன்னொரு மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதினால், உடனே அது தினசரிகளில் வெளியாகும். இரண்டு அமைச்சர்களுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடும் வெளியே தெரியும். ஆனால், மோடி பிரதமரான பின், அமைச்சர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் அது வெளியே தெரியாமல் இருக்க, மோடியின் உத்தரவுதான் காரணம்' என்கின்றனர் கட்சியினர்.