டில்லி உஷ்ஷ்ஷ்: மோடிக்கு நெருக்கமான தமிழக அதிகாரி
டில்லி உஷ்ஷ்ஷ்: மோடிக்கு நெருக்கமான தமிழக அதிகாரி
ADDED : மே 18, 2025 04:25 AM

புதுடில்லி: மத்திய அரசின் கேபினட் செயலர் டி.வி.சோமநாதன்; தமிழர். பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமான அதிகாரி. இவர் நிதி செயலராகவும் இருந்தவர்; மோடியின் திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தவர்.
இவரை அடுத்து, இன்னொரு தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரியும் பிரதமருக்கு நெருக்கமாகிவிட்டதுடன், மோடியின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் உள்ளார். அவர்தான், எஸ்.கிருஷ்ணன். 1989 கேடர் தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், தமிழக நிதி செயலராக பணியாற்றியவர். தற்போது, மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலராக, அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் கீழ் பணியாற்றுகிறார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; அதையடுத்து, 'ஆப்பரேஷன் சிந்துார்' ஆகியவை நடந்தபோது, பிரதமர் மோடி அடிக்கடி கிருஷ்ணனை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.
'பாகிஸ்தான் சைபர் தாக்குதல் நடத்தினால், அதை எப்படி முறியடிக்க வேண்டும்; நம் அரசு தகவல்களை எப்படி பாதுகாப்பது?' என, பல விஷயங்கள் குறித்து இவருடன் விவாதித்து உள்ளாராம் மோடி. ஆப்பரேஷன் சிந்துாரின் போது, கிருஷ்ணன் அமைச்சகம் பல வேலைகளை செய்துள்ளது.
எதிர்காலத்தில் ஏ.ஐ., தொழில்நுட்பம் மிகவும் சக்தி வாய்ந்ததாக மாற உள்ளது; அதை, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் பிரதமர் ஆலோசனை நடத்தியுள்ளாராம்.
மத்திய நிதித்துறை செயலராக வேண்டும் என்பது கிருஷ்ணனின் விருப்பம். ஆனால், 'தகவல் தொழில்நுட்பத் துறையிலேயே பணியாற்றுங்கள்; உங்கள் சேவை, நாட்டிற்கு தேவை' என சொல்லிவிட்டாராம் மோடி.
ஜெயலலிதா, ஸ்டாலின் ஆகியோருக்கு நம்பிக்கையான அதிகாரியாக இருந்த கிருஷ்ணன், தற்போது மோடிக்கும் நெருக்கமாகிவிட்டார்.