நரகத்தில் வசிக்கும் டில்லி மக்கள்: ஆம் ஆத்மி அரசுக்கு கவர்னர் 'குட்டு'
நரகத்தில் வசிக்கும் டில்லி மக்கள்: ஆம் ஆத்மி அரசுக்கு கவர்னர் 'குட்டு'
ADDED : டிச 23, 2024 06:55 AM

புதுடில்லி : டில்லியில், பல்வேறு பகுதிகளில் துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா ஆய்வு செய்த நிலையில், அங்கு வசிக்கும் மக்கள், நரகத்தில் வசிப்பதாக விமர்சித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனே செய்து தரும்படி முதல்வர் ஆதிஷிக்கு உத்தரவிட்டார்.
டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, ஆளுங்கட்சியான ஆம் ஆத்மியினர், டில்லி முழுதும் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த, 10 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்களை எடுத்துரைத்து, மக்களிடம் பிரசாரம் செய்து வருகின்றனர். இதற்கிடையே, டில்லி துணை நிலை கவர்னர் சக்சேனா, ரங்புரி பஹாரி, காபாஷேரா உள்ளிட்ட பகுதிகளில் அரசு அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டு, துணை நிலை கவர்னர் சக்சேனா கூறியதாவது:
நான் ஆய்வு மேற்கொண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர்.
ஏற்கனவே, ஆய்வுக்கு சென்ற புராரி, சங்கம் விஹார் உள்ளிட்ட பகுதிகளிலும் இதே நிலை நீடிக்கிறது.
முறையான வடிகால் வசதி இல்லாததால், குடியிருப்புகளில் கழிவுநீர் தேங்கும் அவலம் உள்ளது. பல்வேறு பகுதிகளில் குடிநீர் பற்றாகுறையும் நிலவுகிறது. நாளொன்றுக்கு 10 மணி நேரம் வரை மின் தடையால் மக்கள் அவதிப்படுகின்றனர். அவர்கள் நரகத்தில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே. அப்பகுதிகளுக்கு முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், முதல்வர் ஆதிஷி, அமைச்சர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு மக்களின் குறைகளை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் சமூக வலைதளத்தில் தன் நன்றியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'துணை நிலை கவர்னர் சுட்டிக்காட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் பிரச்னைகளுக்கு உடனே தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்' என, குறிப்பிட்டுள்ளார்.

