தீபாவளி தினத்தில் அதிகரித்த காற்று மாசு : மூச்சு திணறலால் டில்லி மக்கள் அவதி
தீபாவளி தினத்தில் அதிகரித்த காற்று மாசு : மூச்சு திணறலால் டில்லி மக்கள் அவதி
ADDED : அக் 20, 2025 11:43 PM

புதுடில்லி: டில்லியில் காற்று மாசு ஏற்கனவே அதிகரித்திருந்த நிலையில், தீபாவளியை ஒட்டி நேற்று பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் பல இடங்களில் மேலும் உயர்ந்துள்ளது.
டில்லி மற்றும் என்.சி.ஆர்., எனப்படும் தேசிய தலைநகரை ஒட்டிய பகுதிகளில் ஆண்டுதோறும் காற்று மாசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குளிர்காலங்களில் இது வழக்கத்தைவிட அதிகமாக காணப்படுகிறது. இதனால், உலகளவில் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் டில்லி இடம்பெற்றுள்ளது.
தலைநகரில் கடந்த சில நாட்களாக காற்றின் தரக்குறியீடு, அபாய அளவான 300க்கு மேல் பதிவாகி வருவதால், வாகன ஓட்டிகள், முதியோர் உள்ளிட்டோர் அவதியடைந்து வருகின்றனர்.
இதனால், அங்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், டில்லியில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க, ஏழு ஆண்டுகளுக்கு பின், நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதையடுத்து, கூடுதல் உற்சாகத்துடன் மக்கள் தீபாவளியை நேற்று கொண்டாடினர். இந்த சூழலில், அங்கு காற்றின் தரக்குறியீடு மேலும் மோசமடைந்துள்ளது.
இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது:
டில்லியில் உள்ள 38 கண்காணிப்பு மையங்களில், 24 இடங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமான வகையில் பதிவாகியுள்ளது. இதில், 10க்கும் மேற்பட்ட மையங்களில், 300க்கும் அதிகமாக பதிவாகி உள்ளது.
இந்தியா கேட் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், 347 ஆக பதிவாகியுள்ளது. டில்லியில் மீண்டும் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டதும், இந்த மாசு அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம்.
பட்டாசு வெடிப்பு மற்றும் காலநிலை காரணமாக, இந்த வாரம் முழுதும் இதே அளவு காற்று மாசு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, குழந்தைகள், முதியோர் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
காற்று மாசை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு டில்லி காற்று தர மேலாண்மை கமிஷன் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருவதால், டில்லியில் பல இடங்களில் வயதானவர்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.