சிங்கப்பூர் பஸ் ஷெல்டர் போல மாறும் டில்லி நகர பயணியர் நிற்கும் இடங்கள்
சிங்கப்பூர் பஸ் ஷெல்டர் போல மாறும் டில்லி நகர பயணியர் நிற்கும் இடங்கள்
ADDED : ஜூன் 25, 2025 09:34 PM
புதுடில்லி:'டில்லி நகரின் புதிய பஸ் ஸ்டாப்புகள், பெங்களூரு, சிங்கப்பூர் மற்றும் லண்டன் நகரில் பயணியர் காத்திருக்கும் பஸ் ஷெல்டர்கள் போல மாற்றியமைக்கப்படும்' என, டில்லி போக்குவரத்து அதிகாரிகள் கூறினர்.
அந்த துறை அதிகாரிகள் கூறியதாவது:
பஸ்சுக்காக பயணியர் காத்திருக்கும் ஷெல்டர்கள் புதிதாக கட்டப்பட உள்ளன. டில்லி நகர் முழுக்க 4,627 பஸ் ஷெல்டர்கள் உள்ளன. அவற்றில், 2,021 பஸ் ஷெல்டர்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன.
புதிதாக, 1,397 ஷெல்டர்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும் கூடுதலாக, 1,459 புதிய பஸ் ஷெல்டர்கள் அமைக்கப்பட உள்ளன.
புதிதாக அமைக்கப்பட உள்ள பஸ் ஷெல்டர்களுக்காக பெங்களூரு, நவி மும்பை ஆகிய நம் நாட்டின் நகரங்கள் மற்றும் சிங்கப்பூர் மற்றும் லண்டன் போன்ற சர்வதேச நகரங்களின் பயணியர், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணியர் நிழற் கூடங்களின் மாதிரிகளை பார்த்தோம்.
அவற்றில் இருந்து சிறந்த வடிவமைப்பை தேர்ந்தெடுக்க உள்ளோம். நவீன முறையில், சர்வதேச தரத்தில் பஸ் பயணியர் நிழற்கூரைகளை அமைக்க முடிவு செய்துள்ளோம்.
அந்த பஸ் ஸ்டாப்புகளில் பயணியருக்கு பல விதமான தகவல்களை தெரிவிக்கும் அம்சங்கள் இருக்கும். குறிப்பாக, பஸ் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிவிக்கும், 'எல்.இ.டி., டிஸ்ப்ளே போர்டுகள்' அமைக்கப்படும்.
இந்த பஸ் ஷெல்டர்களின் செலவு மற்றும் பிற அம்சங்கள் கணக்கீடு செய்யப்படுகின்றன. இந்த பஸ் ஷெல்டர்கள் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் அமைக்கப்பட வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் நினைக்கின்றனர்.
சிறந்த வடிவமைப்பு மற்றும் செலவு குறைந்த டெண்டர்கள், கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.