ADDED : நவ 15, 2024 11:13 PM

பச்சை நிற கீரைகள் சாப்பிடுவது, உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். இதனால், தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளும்படி, டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பாலக்கீரையும் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. இதில் ஏராளமான புரோட்டீன், நார்ச்சத்து, பைபர் உள்ளது; சருமத்துக்கும் நல்லது. பாலக்கீரை சாப்பிட்டால், சோரியாசிஸ், அரிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் அண்டாது. சருமம் உலர்வதை தடுக்கும். சிலருக்கு பாலக்கீரை குழம்பு, மசியலை சாப்பிட பிடிக்காது. இவர்கள் பாலக்கீரை இட்லி செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
l பாலக்கீரை - 2 கட்டு
l பயத்தம் பருப்பு - அரை கப்
l ரவை - 2 டேபிள் ஸ்பூன்
l பச்சை மிளகாய் - 1
l தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
l உப்பு - தேவையான அளவு
செய்முறை
பாலக்கீரையை ஆய்ந்து இரண்டு, மூன்று முறை நன்றாக கழுவி, தண்ணீர் வடிய விடுங்கள். பயத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஸ்டவ்வை பற்ற வைத்து, பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். சூடானதும் பாலக்கீரையை போட்டு வதக்கவும்.
கீரை ஆறிய பின், பயத்தம் பருப்புடன் சேர்த்து, இட்லி பதத்துக்கு அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையில் உப்பு சேர்த்து, தயிர் சேர்த்து நன்றாக கலக்குங்கள். அதன்பின் ரவையை போட்டு கிளறுங்கள்.
நெய் அல்லது எண்ணெய் தடவிய இட்லி தட்டில் மாவை ஊற்றி, அடுப்பில் வைத்து ஏழு, எட்டு நிமிடங்கள் வேக வைத்தால், சுவையான பாலக்கீரை இட்லி ரெடி. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும்.

