ADDED : நவ 01, 2024 05:20 AM

மும்பை : கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு ஜூலை - செப்டம்பர் காலத்துக்கு இடையே, இந்தியாவில் தங்கத்தின்தேவை 18 சதவீதம் அதிகரித்து, 248.30 டன்னாக இருந்தது என, உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி தளர்த்தப்பட்டதே தேவை அதிகரிக்க காரணம் என்றும் தெரிவித்துள்ளது. உலக தங்க கவுன்சில் மேலும் தெரிவித்துள்ளதாவது: நடப்பாண்டு ஜூலை - செப்டம்பர் காலத்துக்கு இடையே இந்தியாவின் தங்க தேவை 18 சதவீதம்அதிகரித்து, 248.30 டன்னாக இருந்தது.
இது கடந்தாண்டு இதே காலத்தில் 210.20 டன்னாக இருந்தது. மதிப்பு அடிப்படையில், நாட்டின் தங்க தேவை 53 சதவீதம் அதிகரித்து, 1.65 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
கடந்த ஜூலை மாதம் குறைக்கப்பட்ட தங்கத்துக்கான இறக்குமதி வரி, தேவை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்தது. இதுதவிர, ரிசர்வ் வங்கியின் தொடர் தங்க கொள்முதல், சிறப்பான பருவமழை ஆகியவற்றால், சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் தங்கத்தின் தேவை வலுவாக அதிகரித்தது.
பண்டிகை காலம் மற்றும் திருமண காலம் துவங்கியுள்ளதால், நடப்பு அக்டோபர் - டிசம்பர் காலண்டிலும், இந்தியாவின் தங்கம் தேவை வலுவாகவே இருக்கும். கடந்த நிதியாண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்த தங்கத்தின் தேவை 761 டன்னாக இருந்த நிலையில், நடப்பாண்டில் இது 700 முதல் 750 டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு தெரிவித்து உள்ளது.
இந்தியாவுக்கு தங்கத்தை ஏற்றுமதி செய்த நாடுகளில், 40 சதவீத பங்களிப்புடன் சுவிட்சர்லாந்து முதலிடம் வகிக்கிறது. 16 சதவீதத்துடன் ஐக்கிய அரபு எமிரேட்சும், 10 சதவீதத்துடன் தென் ஆப்ரிக்காவும் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளன.
நாட்டின் மொத்த இறக்குமதியில், தங்கம் ஐந்து சதவீத இடம் வகிப்பதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

