ADDED : மே 23, 2025 01:17 AM
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, தமிழகத்திற்கென ஜூன் மாதத்தில் கர்நாடகா வழங்க வேண்டிய 9.19 டி.எம்.சி., அளவு தண்ணீரையும், ஜூலை மாதத்தில் வழங்க வேண்டிய 31.24 டி.எம்.சி., தண்ணீரையும் திறந்து விட நடவடிக்கை எடுக்கும்படி, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 40வது ஆலோசனை கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து உறுப்பினர்கள், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாகவும், நேரடியாகவும் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் சார்பில் தமிழக அரசின் நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன் பங்கேற்றார். காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்ரமணியம், இக்குழுவின் உறுப்பினர் பட்டாபிராமன் ஆகியோரும் நேரில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் பேசிய அதிகாரிகள், தமிழகத்துக்கு உண்டான தண்ணீர் பங்கீட்டை எவ்வித குறைபாடும் இல்லாமல், சுப்ரீம் கோர்ட் அளித்த பங்கீட்டு அளவின்படி உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த ஆண்டுக்கான ஜூன் மாதத்தில் வழங்க வேண்டிய 9.19 டி.எம்.சி., தண்ணீரையும், ஜூலை மாதத்தில் வழங்கப்பட வேண்டிய 31.24 டி.எம்.சி., தண்ணீரையும், எந்தவிதமான குறைபாடுகளின்றி கர்நாடக அரசு திறந்த விட வேண்டும் என்றும் முறையிட்டனர்
- நமது டில்லி நிருபர் -.