ADDED : நவ 08, 2024 07:48 AM

கோரகுன்டேபாளையா: நிலத்தை ஆக்கிரமித்து கட்டியதாக கூறி 200 வீடுகளை, பி.டி.ஏ., இடித்தது.
பி.டி.ஏ., எனும் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்திற்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து சிலர் கட்டடங்கள், வீடுகள் கட்டி உள்ளனர். கட்டடங்கள், வீடுகளை இடித்து அகற்றி நிலத்தை பி.டி.ஏ., மீட்டு வருகிறது.
இந்நிலையில் கோரகுன்டேபாளையா ஆஷ்ரியா நகர் லே - அவுட்டில் பி.டி.ஏ., நிலத்தை ஆக்கிரமித்து 200 வீடுகள் கட்டப்பட்டு இருந்தது தெரிந்தது. இந்த வீடுகள் நேற்று பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டன.
வீடுகளில் வசித்தவர்கள் பி.டி.ஏ., நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ணீர் வடித்தனர். 'கடந்த 30 முதல் 40 ஆண்டுகளாக இப்பகுதியில் வசிக்கிறோம்.
ஒவ்வொரு வீட்டிலும் முதியவர்கள், குழந்தைகள் உள்ளனர். சில வீடுகளில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களும் உள்ளனர்.
நாங்கள் எங்கு செல்வோம்; எங்களுக்கு அரசு இழப்பீடு தர வேண்டும்' என்றனர்.