ADDED : பிப் 19, 2024 06:54 AM
மைசூரு: அரசு இடத்தில், சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்களை, தாலுகா நிர்வாகம் இடித்தது.
மைசூரு நஜர்பாத்தில் உள்ள மினி விதான் சவுதா பின் பகுதியில், அரசு இடத்தை தனியார் நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இங்கு சட்ட விரோதமாக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
பல ஆண்டுகளாக இந்த கட்டடம், வர்த்தக நோக்கத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. ஒரே கூரையின் கீழ், ஐந்து கடைகள் கட்டி நகல் எடுக்கும் கடை, எழுத்தாளர் அலுவலகம் உட்பட, சிலருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
சட்ட விரோதமாக செயல்படும் கடைகளுக்கு, மின் இணைப்பும் பெறப்பட்டுள்ளது. இதை மாநகராட்சி அதிகாரிகள் கண்டும், காணாமல் இருந்தனர்.
மைசூரு தாசில்தாராக மகேஷ்குமார் பொறுப்பேற்ற பின், ஆவணங்களை ஆய்வு செய்த போது, சட்டவிரோத கடைகள் கட்டப்பட்டிருப்பது தெரிந்தது.
கடைகளை அகற்றும்படி கூறியும் பொருட்படுத்தவில்லை. எனவே தாசில்தார் மகேஷ்குமார், போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அங்கு சென்று, சட்டவிரோத கடைகளை இடித்து தள்ளி, அரசு நிலத்தை மீட்டார்.

