ADDED : அக் 26, 2024 08:01 AM

பெங்களூரு: பெங்களூரு ஹொரமாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட, ஆறு மாடி கட்டடம் நேற்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
பெங்களூரு கே.ஆர்.புரம் பாபுசாப்பாளையாவில், புதிதாக கட்டப்பட்டு வந்த ஏழு மாடி கட்டடம் இடிந்ததில், இடிபாடுகளில் சிக்கி ஒன்பது தொழிலாளர்கள் உயிரிழந்தனர். நான்கு மாடிக்கட்ட மட்டுமே, மாநகராட்சியிடம் இருந்து அனுமதி பெற்றதும், சட்டவிரோதமாக மேலும் 3 மாடி கட்டியதும் தெரிந்தது.
கட்டட உரிமையாளர் முனிராஜ் ரெட்டி மகன் பவன் ரெட்டி, ஒப்பந்ததாரர் பத்ரப்பா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியத்தால், ஒன்பது தொழிலாளர்கள் பலியானதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து, சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டடங்களை இடித்து அகற்றும்படி அதிகாரிகளுக்கு, துணை முதல்வர் சிவகுமார் நேற்று உத்தரவிட்டார்.
l ஹொரமாவில் புதிதாக 6 மாடி கட்டடம் கொண்ட வீடு கட்டப்பட்டு வந்தது. ஆனால் 4 மாடி கட்டடம் கட்டுவதற்கு தான், அனுமதி வாங்கப்பட்டிருந்தது தெரிந்தது. அந்த கட்டடத்தை இடித்து அகற்ற, மாநகராட்சி உத்தரவிட்டது. பக்கத்து வீட்டினருக்கு பிரச்னை ஏற்பட கூடாது என்பதால், ஆறாவது மாடியில் உள்ள வீட்டை சுத்தியலால் அடித்து, தொழிலாளர்கள் உடைத்தனர். மற்ற 5 மாடிகளும் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.
l மஹாலட்சுமி லே - அவுட் கமலாநகரில் திம்மப்பா என்பவருக்கு சொந்தமான, மூன்று மாடி கட்டட வீட்டில், விரிசல் ஏற்பட்டது. சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டிருந்தது தெரிந்தது. வீட்டை முழுவதும் இடிக்க, அதிகாரிகள் முடிவு எடுத்தனர். திம்மப்பாவிடமும் கூறினர். அவரும் ஒப்புக் கொண்டார்.
அந்த வீடுகளில் வசித்த, ஐந்து குடும்பத்தினரை வெளியேற்றி, திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று மாலையில், அந்த வீடும் இடிக்கப்பட்டது.
'வேறு ஒருவரிடம் இருந்து வீடு வாங்கினோம். அவர் சாக்கடை கால்வாய் மீது கட்டி இருப்பது தெரியாது. வாடகைக்கு குடியிருப்பவர்கள் உயிருக்கு மதிப்பு அளித்து, வீட்டை இடித்து அகற்ற ஒப்புக் கொண்டேன். எனக்கு நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது' என, வீட்டின் உரிமையாளர் திம்மப்பா கூறினார்.