ADDED : செப் 04, 2024 05:59 AM

பெங்களூரு : டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் வகையில், டெங்குவை தொற்று நோயாக, கர்நாடக அரசு அறிவித்து உள்ளது. சுகாதாரத்தை பேணாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளது.
கர்நாடகாவில் கடந்த இரண்டு மாதங்களாக, டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது. சுகாதார துறை கொடுத்த தகவலின்படி, ஜனவரி 1ம் தேதியில் இருந்து நேற்று வரை மாநிலத்தில் 25,589 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 181 பேருக்கு, பாதிப்பு உறுதியாகி உள்ளது.
அதிகபட்சமாக பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 83 பேர்; மாண்டியாவில் 10; யாத்கிர், கதக்கில் தலா 9; சித்ரதுர்கா, கோலாரில் தலா 8; தார்வாடில் 7; பெலகாவி, கலபுரகியில் தலா 6.
பீதர், ராம்நகர், உடுப்பியில் தலா 5; துமகூரு, ஹாசன், பல்லாரியில் தலா 4; ஷிவமொகா, விஜயபுரா, ஹாவேரியில் தலா 2; தட்சிண கன்னடா, விஜயநகரில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஏற்ற, இறக்கம்
தொடர்ந்து பாதிப்பு அதிகரிப்பதால், டெங்குவை கட்டுப்படுத்துவதற்காக, தொற்று நோயாக மாநில அரசு அறிவித்து உள்ளது. வீடுகள், பொது இடங்களில் சுகாதாரத்தை கடைப்பிடிக்காதவர்களிடம் அபராதம் வசூலிக்கும் வகையில், தொற்று நோய் கட்டுப்பாட்டு சட்டம் 2020ல் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் நேற்று அளித்த பேட்டி: மாநிலத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த, சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். முன்எச்சரிக்கையுடன் இருக்கும்படி, மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தோம். ஆனாலும் சில இடங்களில், சுகாதாரத்தை பேண மக்கள் முயற்சி எடுக்கவில்லை. பாதிப்பு ஏற்ற, இறக்கமாக உள்ளது. பரவலை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில், டெங்குவை தொற்று நோயாக அரசு அறிவித்து உள்ளது.
சுகாதாரத்தை பேணாதவர்களிடம் அபராதம் விதிக்க பெங்களூரு, மங்களூரு மாநகராட்சிகளுக்கு மட்டும் அதிகாரம் இருந்தது. மற்ற மாவட்டங்களில் கலெக்டர்கள் மேற்பார்வையில், டெங்கு நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுகாதாரத்தை பேணாதவர்களிடம் அபராதம் விதிக்க, கர்நாடக தொற்று நோய் கட்டுப்பாட்டு சட்டம் - 2020ல் திருத்தம் செய்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
குற்ற உணர்வு
நகர பகுதிகளில் உள்ள வீடுகளில் சுகாதாரத்தை பேணாதவர்களுக்கு 400 ரூபாய்; கிராம புறங்களில் 200 ரூபாய்; நகர பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், லாட்ஜ்கள், சொகுசு விடுதிகள், ஹோம் ஸ்டே, தொழிற்சாலைகள், திரை அரங்குகள், பள்ளிகள், வணிக நிறுவனங்களுக்கு 1,000 ரூபாயும்; கிராம பகுதிகளுக்கு 500 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.
கட்டுமான கட்டடங்கள் உட்பட திறந்த வெளியில், சுகாதாரத்தை பேணாதவர்களுக்கு நகர பகுதியில் 2,000; கிராம பகுதிகளில் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இன்னும் மழைக்காலம் உள்ளது. மக்கள் முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சுகாதார அதிகாரிகளால், அனைத்து இடங்களிலும் சென்று ஆய்வு செய்ய முடியாது. மக்கள் ஒத்துழைப்பு ரொம்ப அவசியம்.
கடந்த பா.ஜ., ஆட்சியில் கொரோனா ஊழல் பற்றி, முதல்வர் சித்தராமையாவிடம், விசாரணை கமிஷன் இடைக்கால அறிக்கை அளித்து உள்ளது. அதில் என்ன உள்ளது என்று யாருக்கும் தெரியாது. அதற்குள் பா.ஜ., - எம்.பி., சுதாகர் தன்னை பழிவாங்க, அரசு முயற்சிப்பதாக கூறுகிறார்.
தவறு செய்ததால் அவருக்கு, குற்ற உணர்வு ஏற்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன். கொரோனா காலத்தில் இரவு, பகலாக வேலை செய்தேன் என்று அவர் கூறுகிறார். வேலை பார்ப்பதற்கு தானே, அவர் அமைச்சராக்கபட்டார். இவ்வாறு அவர்கூறினார்.