நம் நாட்டில் அடுத்தாண்டு பயன்பாட்டுக்கு வருகிறது டெங்கு தடுப்பூசி!: ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது
நம் நாட்டில் அடுத்தாண்டு பயன்பாட்டுக்கு வருகிறது டெங்கு தடுப்பூசி!: ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது
UPDATED : செப் 18, 2026 09:58 PM
ADDED : செப் 18, 2026 09:43 PM
புதுடில்லி: டெங்கு காய்ச்சலை தடுக்கும் முதல் தடுப்பூசியான, 'க்யூடெங்கா', அடுத்தாண்டு முதல் நம் நாட்டில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. ஜப்பானை சேர்ந்த, 'டகேடா பார்மசூட்டிக்கல்ஸ்' நிறுவனத்துடன், இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
நம் நாட்டில் மழைக்காலங்களில் ஆண்டுதோறும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. 'ஏடிஸ்' வகை கொசுக்களால் பரவும் இந்த நோயால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். காய்ச்சல் தீவிரமடைந்து ரத்த தட்டணுக்கள் குறையும்போது, பலருக்கு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் உருவாகிறது; உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
கடந்த, 20 ஆண்டுகளில், நம் நாட்டில் டெங்குவின் தாக்கம் 11 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்தாண்டு மட்டும், இந்தியாவில் 1.13 லட்சம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். இதில், 95 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தாண்டும் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் 70 முதல் 100 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
கொசு ஒழிப்பு, விழிப்புணர்வு, காய்ச்சல் வந்த பின் சிகிச்சை அளிப்பது மட்டுமே, டெங்குவை தடுப்பதற்கான வழிகளாக இருந்த நிலையில், ஜப்பானின் 'டகேடா பார்மசூட்டிகல்ஸ்' மருந்து நிறுவனம், 'க்யூடெங்கா' என்ற தடுப்பூசியை தயாரித்தது. இந்தாண்டு தொடக்கத்தில் நடத்தப்பட்ட இறுதிகட்ட மருத்துவ சோதனையில், தடுப்பூசி செலுத்திய ஓராண்டுக்கு பின், டெங்கு பாதிப்புக்கு எதிராக 80.2 சதவீத செயல்திறனை 'க்யூடெங்கா' வெளிப்படுத்தியது.
இரண்டாவது தவணை செலுத்திய 18 மாதங்களுக்கு பின், டெங்கு பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை தடுப்பதில் இந்த தடுப்பூசி 90.4 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, 'கியூடெங்கா' தடுப்பூசியை நம் நாட்டில் பயன்படுத்தவும், சந்தைப்படுத்தவும் மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு கடந்த ஜூலையில் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், இந்த தடுப்பூசியை நம் நாட்டில் சந்தைப்படுத்தும் ஒப்பந்தத்தில், 'டகேடா' நிறுவனத்துடன், தெலுங்கானாவின் ஹைதராபாதை தலைமை இடமாக வைத்து செயல்படும், 'டாக்டர் ரெட்டீஸ் லேபராட்டரிஸ்' நிறுவனம் நேற்று கையெழுத்திட்டது. கர்நாடகாவின் பெங்களூரில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதைத் தொடர்ந்து, 'க்யூடெங்கா' தடுப்பூசி, அடுத்தாண்டு முதல் நம் நாட்டில் பயன்பாட்டுக்கு வரும் என இரு தரப்பினரும் அறிவித்துள்ளனர். 'இந்த ஒப்பந்தம், தனியார் சந்தை வாயிலாக, டெங்கு தடுப்பூசி குறித்த நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்யும். உள்ளூர் அதிகாரிகளுடனான நடைமுறைகள் நிறைவடைந்த பின், அடுத்தாண்டின் முதல் பாதியில் இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு கிடைக்கும்' என, இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
நம் நாட்டில் இந்த தடுப்பூசியின் அதிகாரப்பூர்வ விற்பனை விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில் இதன் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
